ஒடிசாவில் அமைச்சர் மீது நடத்தப்பட்ட துப்பாகிச் சூட்டிற்கு முதலமைச்சர் நவீன் பட்நாயக் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் புலன் விசாரணை நடத்துவதற்கும் உத்தரவிட்டுள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் பிஜூ ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் தலைவரான நவீன் பட்நாயக் 5 முறைக்கு மேல் அங்கு முதலமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார்.
நவீன் பட்நாயக் தலைமையிலான ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராகவும், பிஜு ஜனதாதள கட்சியின் மூத்த தலைவராகவும் இருப்பவர் நபா கிஷோர் தாஸ் . இன்று அவர் ஜார்சுகுடா மாவட்டம் பிரஜாராஜ் நகர் பகுதியில் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவதற்காக காரில் சென்றார். அமைச்சர் நபா கிஷோர் தாஸ் காரைவிட்டு இறங்கியபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உதவி காவல் ஆய்வளர் கோபால் தாஸ் என்பவர், அமைச்சரின் மார்பை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டார். நான்கு முறைக்கு மேல் அவர் துப்பாக்கியால் சுட்டதால் அமைச்சர் நபா கிஷோர் தாஸ் சரிந்து கீழே விழுந்துள்ளார். இந்த நிகழ்வின் போது உள்ளூர் காவல்நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட இருவர் மீதும் கோபால் தாஸ் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
பதற்றமடைந்த பொதுமக்களும் , காவல்துறையினரும் துப்பாக்கி குண்டடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த அமைச்சர் உட்பட மூவரை மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். நபா தாஸின் மார்பில் குண்டு பாய்ந்துள்ளதால் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் ஜார்சுகுடா மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மேல் சிகிச்சைக்காக தலைநகரான புவனேஷ்வருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அமைச்சரை துப்பாக்கியால் சுட்ட கோபால் தாஸ் தப்பித்து ஓடாமல் அங்கேயே நின்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து அவரிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நபா கிஷோர் தாஸ் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். நபா கிஷோர் தாஸ் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன். “ என அவர் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக முதலமைச்சர் நவீன் பட்நாயக் புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
– யாழன்







