சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுமார் 1.5 km உயரத்தில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 3.1 km உயரத்தில் தெற்கு ஆந்திரம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவை பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் மதுரை, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, நீலகிரி, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




