இயக்குனர் பாரதிராஜா உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

இயக்குனர் பாரதிராஜா உடலுக்கு 72 குண்டுகள் முழுங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் பாரதிராஜா நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 84. கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இயக்குனர் பாரதிராஜா சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாராதிராஜாவின் மறைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வந்தனர்.

இதனிடையே நேற்று இரவு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டுசெல்லப்பட்ட பாரதிராஜாவின் உடல், வத்தலகுண்டு அருகே காட்ரோட்டில் உள்ள அவரது பண்ணை வீட்டில், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இயக்குநர் பாரதிராஜா இறுதிச் சடங்குக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் நிர்மல்குமார், வன்னி அரசு ஆகியோர் பாரதிராஜா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து இயக்குனர் பாரதிராஜா உடலுக்கு 72 குண்டுகள் முழுங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.