திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரம் : உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்துங்கள் – நயினார் நாகேந்திரன் கோரிக்கை!

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று
தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை வைத்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்ற, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. இந்த தீர்ப்பினால் கோடிக்கணக்கான முருகபக்தர்களும், தமிழ் மக்களும் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு கோடிக்கணக்கான முருகபக்தர்கள் மற்றும் தமிழ் மக்களின் நெடுங்கால கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது.

கடந்த 6.1.2026 அன்று, திருப்பரங்குன்ற மலைஉச்சியில் உள்ள தீபத்தூணில், கார்த்திகை தீபம் எற்றலாம். என்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் ஆர்ப்பரித்து எழுந்தலட்சக்கணக்கான முருகபக்தர்களும், தமிழ் ஆர்வலர்களும் தீபம் ஏற்ற சென்றபொழுது, அவர்களைத் தடுத்து நிறுத்தி, அவர்கள் மலையேறக்கூடாத வகையில் 144 தடை உத்தரவை அன்றைய திமுக அரசு விதித்தது, அதைக் கண்டித்து தன்னெழுச்சியாக மதுரை மாநகர மக்கள் திமுக அரசைக் கண்டித்து, தங்களது எதிர்ப்பை தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அந்த தன்னெழுச்சிமிக்க போராட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி, நமது கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களோடு நானும் கைது செய்யப்பட்டேன். இன்றைய தவெக அரசின் அமைச்சர்கள் நிர்மல் குமார் மற்றும் ரமேஷ் ஆகியோர் முந்தைய திமுக அரசு சொன்னதைப்போலவே, திருப்பரங்குன்றம் மலையின் தீபத்தூணில் விளக்கேற்ற அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார்கள். அமைச்சர்களது பேச்சு, தவெக அரசு ஸ்டாலின் அரசின் ஒரு கார்பன் காப்பியாகும் என்பது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேலும், அமைச்சர்கள் பேசிய விதம் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அவமதிக்கும் செயலாகும். அவர்கள்மீது அவதூறு வழக்கு தொடரப்படுமானால், அவர்களது அமைச்சர் பதவிக்களுக்கு ஆபத்தாக முடியும். அதை அறியாமல், தன்னுடைய விருப்பம்போல, வாய்க்கு வந்தப்படி பேசி திரிகிறார்கள் அமைச்சர்கள். இதன் பின்விளைவுகளை அவர்கள் சந்தித்தே ஆக வேண்டும். என எச்சரிக்கின்றேன்.

ஆகவே, இம்மாதிரியான விரும்பத்தகாத செயல்கள் நடப்பதைத் தவிர்த்து, உச்சநீதிமன்றத்தின் உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என தவெக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். நம்முடைய பெருமைமிக்க கலாச்சாரப் பண்பாடு மற்றும் அழிக்க முடியாத சனாதன பண்புகள் ஆகியவற்றை உச்சநீதிமன்றம் பாதுகாத்து, கொடுத்துள்ளது. இது தமிழ் மக்களுக்கு புது எழுச்சியும், புத்துணர்ச்சியும் கொடுத்துள்ளது. நமது பண்பாடு, கலாச்சாரம் சனாதனத்தை பேணி காப்போம்! என்று மீண்டும் உறுதி ஏற்போம்!!

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.