மெட்ரோ ரயில்களில் நடப்பாண்டில் இதுவரை இல்லாத வகையில் ஜூன் 23-ம் தேதி மட்டும் 2.81 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மூலம் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில்கள், சென்னைவாசிகள், போக்குவரத்து நெரிசல் இன்றியும், வேகமாக செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லவும் உதவி வருகிறது. இதில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணித்து பயன் பெற்று வருகின்றனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயில்களில் க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளைப் பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடி வழங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த மே மாதம் 24-ம் தேதி 2.64 லட்சம் பேர் பயணம் செய்ததே அதிகமாக இருந்த நிலையில், கடந்த ஜூன் 23-ம் தேதி ஒரு நாளில் மட்டும் 2,81,503 பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
“சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போது ஒரு நம்பகமாக பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. அதன் பயனாக சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது. இது பயணிகளின் நல்வரவேற்பை பெற்றுள்ளதாகவும், பயன்பாடும் அதிகரித்து வருவதையும் காட்டுகிறது.
இந்த நிலையில் கடந்த ஜூன் 23-ம் தேதி அன்று ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 2,81,503 பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலைத்தில் 23,745 பயணிகளும், திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் 14,935 பயணிகளும், கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் 14,938 பயணிகளும் பயணம் செய்துள்ளனர்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.







