இரண்டு ஆணையங்களின் அறிக்கையும் மக்களிடம் 100 சதவிகிதம் சென்றடைந்து உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்வுகள் நிமிட வாரியாக எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும் என அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உளவுத்துறை தகவல் தெரிவித்தும் சட்ட ஒழுங்கு நிலை கவனிக்கப்படாமல் இருந்தது. தீவிரமாக கவனித்திருந்தால் ஆரம்பத்திலேயே திறம்பட சமாளித்திருக்கலாம் என அறிக்கை தெரிவிக்கிறது. எடப்பாடி பழனிசாமி அலட்சியம், அசட்டையாகவும் இருந்ததாக ஆணையம் தெரிவித்துள்ளது.
சட்டப்பேரவையில் நேற்று எடப்பாடி பழனிசாமி கலவர நாடகத்தை நடத்தி, வெளியேற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இரண்டு ஆணைய அறிக்கைகளிலும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவர் தொடர்புடையவர்கள் மீது நேரடியாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனை நேரடியாக சந்திக்க முடியாமல் சட்டமன்றத்தில் மிகப்பெரிய கலவரத்தை பழனிசாமி அரங்கேற்றினார். சட்டமன்றம் நடைபெறும் நேரங்களில் மாநகர பகுதிகளில் போராட்டங்களுக்கு அனுமதி கிடைக்காது என்று தெரிந்தும் சட்டம் & ஒழுங்கு சீர்குலைவிற்கு பழனிசாமி வழிவகுத்துள்ளார் என குறிபிட்டார்.
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயலாளர் நடவடிக்கைகள் மேற்கொள்வார். யாராக இருந்தாலும் குற்றச்சாட்டுடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆணையங்களின் அறிக்கை 100 சதவீதம் மக்களிடம் சென்றடைந்துவிட்டது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.







