இஸ்ரேலில் படித்து வந்த கல்லூரி மாணவ, மாணவிகள் 8 பேர் விமானம் மூலம் மதுரை வந்தடைந்தனர். அந்த மாணவிகளை அவரவர் சொந்த ஊர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுப்பிவைத்தது.
இஸ்ரேல் நாட்டில் நடக்கும் போர் காரணமாக ‘ஆப்ரேஷன் அஜய்’ மூலமாக இந்தியா திரும்பியவர்களில் 22 தமிழர்கள் டெல்லியில் இருந்து தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் பர்லான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் 8 பேர் தனி விமானம் மூலம் டெல்லி வந்தபிறகு மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர்.
விமான நிலையத்தில் அவர்களை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகர காவல் துணை ஆணையர் பிரதீப் வரவேற்றனர். மதுரை வந்த 8 பேரில், மதுரை மாவட்டத்தைச் சார்ந்த 4 பேரும், திருச்சியைச் சேர்ந்த இருவர், அரியலூர் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த இருவர் உள்ளிட்ட 8 பேரும் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தனர்.
போர் சூழலில் சிக்கிய தங்களை பத்திரமாக அழைத்து வந்த மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவிப்பதாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். போர் முடிவுக்கு வந்தவுடன் இஸ்ரேல் திரும்பிச் செல்வோம் எனவும் கூறினர்.







