பிரதமர் மோடி இன்று அசாமில் நடந்த அரசியல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசியதாவது ; நாடாளுமன்றத்தில் சில நாட்களுக்கு முன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர் நான் மேற்கொள்ளும் முதல் அசாமுக்கான முதல் பயணம் இதுவாகும்.
வடகிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது. ஆனால் அப்பகுதிகளுக்கு நாங்கள் முன்னுரிமை அளித்துள்ளோம். அதன் வளர்ச்சிக்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம். வடகிழக்கு பகுதிகள் எங்களுக்கு அஷ்டலட்சுமி ஆகும். வடகிழக்கு பகுதியை பொருளாதார ரீதியாக சுதந்திரமாக்குவதற்கு நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம்.
இந்தியாவை ஒரு தேசமாகக் கூட கருத காங்கிரஸ் மறுக்கிறது. தாய் நாட்டிற்கு மரியாதை காட்டாதவர்கள் ஒருபோதும் நாட்டின் நலனுக்காக பாடுபட முடியாது. இன்று, வாகனங்கள் ஓடுவது மட்டுமல்லாமல், விமானங்கள் கூட தரையிறங்கக்கூடிய வகையில் நெடுஞ்சாலைகள் கட்டப்பட்டு வருகின்றன. இது பெருமைக்குரிய தருணம்.







