இந்தியாவில் ஒரே ஆண்டில் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குளை கொண்டு வந்த ஒரே அரசு அதிமுக அரசு தான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராமன் உள்பட அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார் என்றும், எத்தனை அவதாரம் எடுத்தாலும் ஸ்டாலினால் வெல்ல முடியாது என்றும் குறிப்பிட்டார். அதிமுக எதுவும் செய்யவில்லை என ஸ்டாலின் பொய் தகவலை பரப்பி வருகிறார் என குற்றம்சாட்டிய முதலமைச்சர், கோவையில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி நூறு சதவீதம் வெற்றி பெறும், என்று கூறினார்.

குடும்ப அரசியல் செய்கிற கட்சி அதிமுக அல்ல எனக் கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோவையில் மெட்ரோ ரயில், விமான நிலைய விரிவாக்கம், புறவழிச்சாலை, என நிறைய திட்டங்கள் வர உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், திமுகவை சேர்ந்த 13 முன்னாள் அமைச்சர்கள் மீது, நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதை மறைப்பதற்கு, தங்கள் மீது ஸ்டாலின் குற்றம்சாட்டுவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். மேலும், இந்தியாவில் ஒரே ஆண்டில் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகளை கொண்டு வந்த ஒரே அரசு அதிமுக அரசு தான் என்றும் கூறினார்







