மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று சாமி தரிசனம் செய்தார்.
தமிழகத்தில் வரும் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சியினரும் கொளுத்தும் வெயிலிலும் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 28ஆம் தேதி தாராபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார்.

இந்த நிலையில் பரப்புரை மேற்கொள்வதற்காக கொல்கத்தாவில் இருந்து தனி விமானம் மூலம் இன்று இரவு 8 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அங்கிருந்து சாலை மார்க்கமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்ற பிரதமருக்கு, பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை தொட்டு வணங்கிய பிரதமர், கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தார். தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையை அணிந்திருந்தார் பிரதமர்.
தரிசனம் மேற்கொண்ட பின்னர் பசுமலையிலுள்ள தனியார் விடுதிக்கு சென்ற பிரதமர் அங்கு இரவு ஓய்வு எடுக்கிறார். பின்னர் நாளை மதுரை அம்மா திடலில் நடைபெறும் பரப்புரை பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். பிரதமர் வருகையையொட்டி மதுரை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.







