’சினிமா To அரசியல்’ தமிழ்நாட்டின் சாபக்கேடு – திருமாவளவன் பேட்டி!

சினிமாவில் இருந்து வரும் நபர்கள் முதலமைச்சர் ஆகி விடலாம் என நினைக்கின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்த சாபக்கேடு உள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து, ஆர்.என் ரவியை…

சினிமாவில் இருந்து வரும் நபர்கள் முதலமைச்சர் ஆகி விடலாம் என நினைக்கின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்த சாபக்கேடு உள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து, ஆர்.என் ரவியை அகற்றக்கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நேற்று தொடங்கப்பட்ட நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் கையெழுத்தை பெறுவதற்காக சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமையகத்திற்கு மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ இன்று வருகை தந்தார்.

இதன் பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

”ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசுக்கு மட்டுமின்றி மக்களுக்கு எதிராகவும் தொடர்ந்து பேசி வருகிறார். பெரியார் அம்பேத்கர் போன்ற மாமனிதர்கள் பெயரை கூட உச்சரிக்க கூச்சப்படுகிறார். அரசியல் கட்சிகள் மட்டும் இன்றி, பெரும்பான்மையான மக்களும் ஆளுநரின் இந்த போக்கை கண்டிக்கிறார்கள் அதோடு அவர் பதவி விலக வேண்டும் அல்லது பதவியில் இருந்து அவரை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கிறார்கள்.

ஆளுநர் ஆர் என் ரவி தமிழ்நாட்டில் தொடர்ந்து பதவியில் இருந்தால் மாநிலத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவார் சட்டம் ஒழுங்கு சீர்குலைப்பதற்கான அனைத்து வேலைகளும் ஈடுபடுவார் மதத்தின் பெயரால் ஜாதியின் பெயரால் மக்களை தூண்டி விட்டு மணிப்பூரிலே இன்று நடப்பது போன்ற பாதிப்பை ஏற்படுத்த வழி வகுப்பார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது பற்றி ஒன்றுமில்லை. அம்பேத்கர் பெரியார் போன்ற தலைவர் பற்றி படிக்க வேண்டும் என நல்ல எண்ணத்தின் அடிப்படையில் கூறியுள்ளதை வரவேற்கிறோம். ஆனால் மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பொது வாழ்வுக்கு வர வேண்டும். பொதுவாக சினிமாவில் இருந்து வரும் நபர்கள் சினிமா மூலம் கிடைத்த பிரபலத்தால் முதலமைச்சர் ஆகி விடலாம் என நினைக்கின்றனர்.

தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்த சாபக்கேடு உள்ளது. இந்தியாவின் மற்ற எல்லா மாநிலத்திலும் சினிமாவில் உள்ள நபர்கள் அவர்கள் வேலையை பார்க்கின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் தான் சினிமா காலம் முடியும் நேரத்தில் அரசியலுக்கு வரலாம் என்று அரசியலுக்கு வந்து மக்களை கவர்ந்து விடலாம் என நினைக்கின்றனர்.

கேரளாவில் மம்முட்டி, கர்நாடகாவில் ராஜ்குமார், தேசிய அளவில் பிரபலமான அமிதாப்பச்சன் என யாரும் இதனை செய்யவில்லை. இதில் எம்ஜிஆர். என்டிஆர் போன்றோர் விதிவிலக்கு. ஆனால் அதேபோல் அனைவரும் முதலமைச்சர் ஆகிவிட முடியாது.”

இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.