ரொனால்டோவின் ஒற்றை சொல்: ரூ. 29 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்த நிறுவனம்!

கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஒற்றை வார்த்தையால், பிரபல குளிர்பான நிறுவனம் 29 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. உலகில் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை பேஸ்புக்,…

கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஒற்றை வார்த்தையால், பிரபல குளிர்பான நிறுவனம் 29 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.

உலகில் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் கோடிக்கணக்கானோர் பின்பற்றுகின்றனர். உலகளவில் ரசிகர் பட்டாளத்தயே கொண்டுள்ளார் இவர். ரொனால்டோ தெரிவிக்கும் கருத்துகள் உடனடியாக உலகளவில் டிரெண்டாவது வழக்கம். அப்படி, இவர் சொன்ன கருத்தே தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது.

யூரோ கோப்பை தொடரின் நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் அணி ஹங்கேரி அணியை எதிர்கொண்டது. இதற்கு முன்னதாக நடந்த செய்தியாளர் சந்திப்பிற்கு வந்த ரொனால்டோ, மேஜையில் Coca-Cola குளிர்பான பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தை பார்த்தார்.

உடனடியாக அந்த பாட்டில்களை அகற்றிய ரொனால்டோ, தண்ணீர் பாட்டிலை மேஜையில் வைத்துவிட்டு ”அகுவா” என்றார். போர்ச்சுகீசிய மொழியில் ”அகுவா” என்றால் தண்ணீர் என்று பொருள்.

குளிர்பானங்களை தவிர்த்துவிட்டு, தண்ணீரை அருந்துங்கள் என்ற ரொனால்டோவின் இந்த செயல், சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்த, ரொனால்டோ, டிரிங்க் வாட்டர் என்ற ஹாஷ்டேக்குகள் டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகின.

இந்த விவகாரம் Coca-Cola நிறுவன சந்தை மதிப்பிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு மளமளவென சரிவடைந்தது. இதனால், 4 பில்லியன் டாலர், இந்திய மதிப்பில் 29 ஆயிரம் கோடிக்கும் மேல் அந்நிறுவனம் இழப்பை சந்திக்க நேர்ந்தது. மேலும் பங்கு சந்தையில் coca -cola நிறுவனத்தின் பங்கு 1.6% சரிந்துள்ளது.

Coca-Cola நிறுவனம், யூரோவின் அதிகாரப்பூர்வ விளம்பரதாரர்களில் ஒன்றாக உள்ள நிலையில், ரொனால்டோ மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதேநேரத்தில், ரொனால்டோவின் செயலுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும் குவிந்து வருகிறது.

உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், முன்னணி நட்சத்திரங்கள் ரொனால்டோவை பின்பற்ற வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.