டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் உரிமைகள் அனைத்தையும் பெற்றுத்தர பிரதமரிடம் வலியுறுத்துவார் என மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேற்கொண்டார். திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மருத்துவர்களிடம் காணொலி காட்சி வாயிலாக பேசினர்.
தொடர்ந்து நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திலும் கலந்து கொண்ட பின், அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மத்திய தொகுப்பில் இருந்து தமிழ்நாட்டிற்கு தேவையான கூடுதல் தடுப்பூசிகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பார் எனக் கூறினார். தமிழ்நாட்டின் உரிமைகள் அனைத்தையும் பெற்றுத்தர பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்துவார் என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்தார்.







