முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அதற்காக தற்போது சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டார். முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை 7.30 மணியளவில் சிறப்பு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அதற்காக தற்போது சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டார்.

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை 7.30 மணியளவில் சிறப்பு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். மாலை 5 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து பேசுவுள்ளார். பின்னர் நாளை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை சந்திக்கிறார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று, 40 நாட்கள் நிறைவடைந்துள்ளன. பதவியேற்ற போதே, வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்ட மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசுடன் மாநில அரசு இணைந்து செயல்படும் எனத் தெரிவித்திருந்தார்.

அரசு அறிக்கை, கவுன்சில் கூட்டம், ஊடக சந்திப்பு என அனைத்திலும் ஒன்றிய அரசு என்ற பதத்தையே முதலமைச்சர் பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில்தான், பிரதமரை சந்திக்க டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சராக பதவியேற்ற பின்பு, முதல் முறையாக பிரதமரை நேரில் சந்திக்கும் ஸ்டாலின், இந்த சந்திப்பின் போது, பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதாக எதிரார்க்கப்படுகிறது.

குறிப்பாக, கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாட்டுக்கு கூடுதல் தடுப்பூசி வழங்குமாறும், செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தில் பணிகளை தொடங்குவது குறித்தும் பிரதமரிடம் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் கருப்பு பூஞ்சை நோய் தொற்றுக்கான மருந்துகளை வழங்குவது குறித்தும் ஆலோசிப்பார் எனத் தெரிகிறது.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் போதே, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்குவது குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியிருந்த நிலையில், GST நிலுவை தொகையை தமிழ்நாட்டிற்கு வழங்க, முதலமைச்சர் வலியுறுத்தவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தமிழ்நாட்டிற்கு கூடுதலாக கொரோனா நிவாரண நிதியை ஒதுக்க கோருவார் என்றும் கூறப்படுகிறது.

சவாலான காலத்தில் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ள மு.க.ஸ்டாலின், ஆரோக்கியமான அரசியலையே முன்னெடுப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனை உறுதிப்படுத்தும் வகையில், மத்திய அரசுடன் இணக்கமான சூழலை உருவாக்கவே முதலமைச்சர் டெல்லி பயணம் மேற்கொள்வதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அதேநேரத்தில் மாநில உரிமை தொடர்பான விவகாரங்களில் அரசின் நிலைப்பாட்டை முதலமைச்சர் எடுத்துரைப்பார் என்றும் குறிப்பிடுகின்றனர்.

இந்த சந்திப்பின் போது பல்வேறு அமைச்சர்களையும் சந்திக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், கல்வி கொள்கை, நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்ட ஏல அறிவிக்கை உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்தும் வலியுறுத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.