கொரொனா நோய்த்தொற்றுகள் குறித்த சீனாவின் தரவுகள் போதுமானதாக இல்லை என்ற உலக சுகாதார நிறுவனத்தின் கவலையை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் எதிரொலித்துள்ளன.
கொரொனா பெருந்தொற்றிலிருந்து உலகம் ஓரளவு மீண்டு சகஜ நிலைக்கு திரும்பிய நிலையில் மீண்டும் சீனாவில் அதிகரித்துள்ள கொரொனா தொற்றுக்களின் எண்ணிக்கை கவலை அளிப்பதாக உலக நாடுகள் தெரிவித்துள்ளன. கடந்த டிசம்பர் மாதத்தில் புதிய கொரொனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நாடுகள் மீண்டும் கட்டுப்பாடுகள் விதித்தன. பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் சீனாவிலிருந்து வரும் பயணிகள் மற்றும் விமானங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் கொரானா பரிசோதனை, விமானங்களிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை முறையாக கையாளுதல் போன்றவற்றை கடைபிடிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் சீனாவின் கொரானா தொற்று எண்ணிக்கை குறித்த புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி சீனாவின் பிராதான பகுதியில் கடந்த டிசம்பர் மாத இறுதி வாரத்தில் 15,161 தொற்று எண்ணிக்கையும் , ஜனவரி முதல் வாரத்தில் 22,416 தொற்று எண்ணிக்கையும் பதிவாகியுள்ளது. ஒட்டுமொத்த சீனாவில் புதிய உருமாற்றப்பட்ட வைரஸ் தொற்றின் மூலம் 2,18,019 புதிய தொற்றுகளும், 648 புதிய மரணங்களும் நிகழ்ந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் மற்றும் அதன் உறுப்பு நாடுகளுடனான ஆன்லைன் சந்திப்பில் சீனாவின் தேசிய சுகாதார ஆணைய அதிகாரிகள் கோவிட் நிலைமை குறித்து நேற்று ஒரு விளக்கக் காட்சியை வழங்கியதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிகழ்வில் சமீபத்திய தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், உருமாறிய வைரஸ் தொற்றை கண்காணித்தல், தடுப்பூசி முயற்சிகள் மற்றும் நோய்த் தொற்றுகளுக்கான சிகிச்சைகள் குறித்து அறிக்கை வழங்கியதாகவும் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
கொரொனா நோய்த்தொற்றுகள் குறித்த சீனாவின் தரவுகள் போதுமானதாக இல்லை என்ற உலக சுகாதார நிறுவனத்தின் கவலையை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் எதிரொலித்துள்ள நிலையில் கொரொனா தொற்றை முறையாக கட்டுப்படுத்தி வருவதாகவும், முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உலக சுகாதாரன நிறுவனத்திடம் சீன அரசு தெரிவித்துள்ளது.