மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசையும், டி.கே சிவகுமாரையும் கண்டிக்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மனமில்லை – அண்ணாமலை

மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசையும், டி.கே சிவகுமாரையும் கண்டிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனமில்லை எனவும், அவர் பெங்களூரு சென்றால் “கோ பேக்” ஸ்டாலின் என கருப்பு பலூன் பறக்க விடுவோம் என்றும் தமிழக பாஜக…

மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசையும், டி.கே சிவகுமாரையும் கண்டிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனமில்லை எனவும், அவர் பெங்களூரு சென்றால் “கோ பேக்” ஸ்டாலின் என கருப்பு பலூன் பறக்க விடுவோம் என்றும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது;

கர்நாடகா காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் பாஜக எந்த அரசியலும் செய்யவில்லை. மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்ற பிரச்சனையை கர்நாடக தான் கிளப்பியது. தேர்தல் வாக்குறுதியில் மேகதாது அணை கட்டுவோம் எனக் கூறியது காங்கிரஸ். காங்கிரசையோ டி.கே.சிவக்குமாரையோ கண்டிக்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மனமில்லை. மேகதாது மூலமாக அதிகமாக பயன்படப்போவது சிவக்குமாரின் தொகுதி தான்.

முல்லை பெரியாரிலும் நம் உரிமை விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை அமைத்தது பாஜக அரசு தான். மேகதாதுவில் அணை கட்ட வேண்டுமென்று இல்லாத பிரச்சனையை கிளப்பியது காங்கிரஸ் தான். பாஜக அதை கண்டித்தது. கீழே இருக்கும் மாநிலங்களின் அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது என்பதை பாஜக மத்திய அமைச்சர்கள் தெளிவாக கூறியுள்ளனர்.

காவிரி விவகாரம் லட்சக்கணக்கான தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் பற்றியது. இந்த சூழலில் தான் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னை அகில இந்திய தலைவராக அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகளின் சார்பில் நடைபெறும் கூட்டத்திற்கு செல்கிறார். பெங்களூரில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு நம் முதல்வர் எப்படி செல்ல முடியும்? தமிழர்களின் தன்மானத்தை தாரை வார்த்துவிட்டு செல்வாரா? கர்நாடகாவிற்கு ஸ்டாலின் செல்லலாம். ஆனால் திரும்பி வந்தால் “Go back stalin ” என கருப்பு பலூன் பறக்க விடுவோம். ஒவ்வொரு வீட்டுக்கு முன்பும் , விமான நிலையத்திலும் என அனைத்து இடங்களிலும் கருப்பு பலூனுடன் வீதியில் நிற்போம்.

டி.கே.சிவக்குமாரை கேள்வி கேட்க முடியவில்லை என்றால், இத்தனை திமுக, காங்கிரஸ், எம்.பிக்கள் இருக்கிறீர்கள்?. மேகதாது விவகாரத்தில் காங்கிரஸ் நிலைப்பாடு என்ன என்று கார்கேவை சொல்ல வையுங்கள் பார்க்கலாம். மத்திய அரசின் Stated policy ல் மாற்றம் இல்லை. காஙங்கிரஸ் ஆக்ரோஷமாக மேகதாது விவகாரத்தை கையிலெடுத்துள்ளது. திமுகவோ Silent spectator ஆக இதை வரவேற்கிறது.

தமிழ்நாட்டிலிருந்து ஒரு எம்.பி பெங்களூரு சென்று சித்தராமையாவை சந்தியுங்கள். அதை விடுத்து நாடாளுமன்றத்தில் குரலெழுப்புவதால் என்ன பலன்? பிரச்சனை டெல்லியில் இல்லை. பெங்களூரில் இருக்கிறது. திமுகவின் இதயத்தில் பிரச்சனை இருக்கிறது. ஊழலை முழுமையாக எதிர்க்கும் கட்சி பாஜக. மஹாராஷ்டிராவில் நாம் இருக்கும் கூட்டணியில் ஊழல் குற்றம்சாட்டப்பட்டோர் அமைச்சரவையில் இருந்தாலும் மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் சுதந்திரமாக தங்கள் விசாரணையை செய்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.