தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கக்கோப்பை வென்ற தமிழ்நாடு அணி வீராங்கனைகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பஞ்சாப் மாநிலத்தில் தேசிய அளவினான பெண்கள் சீனியர் கால்பந்து போட்டி தொடர் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்தது. இதில் அரியானா மாநில அணியை எதிர்கொண்ட தமிழ்நாடு அணி 2-1 என்கிற கோல் கணக்கில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றது.
இந்தாண்டு தனது 2வது முறையாக தமிழ்நாடு சீனியர் பெண்கள் கால்பந்தாட்ட அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. வெற்றி பெற்ற தமிழக அணியினருக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர்.
வெற்றி பதக்கங்களுடன் சென்னை திரும்பிய தமிழக கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து, தற்போது தமிழ்நாடு தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது கால்பந்தாட்ட பயிற்சியாளர்கள், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பின் போது விளையாட்டு வீராங்கனைகள் முதல்வரிடம் ”தங்களுக்கு அரசு வேலை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் மற்றும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.








