தனக்காக போக்குவரத்தை நிறுத்த வேண்டாம் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
புதுச்சேரியில் ஆளுநர், முதல்வர் உள்ளிட்ட முக்கிய உயரதிகாரிகள் காரில் பயணம் செய்யும் போது முக்கிய சாலை சந்திப்பில் உள்ள சிக்னல்களை நிறுத்தி அவர்கள் விரைந்து செல்ல போக்குவரத்து காவல்துறையினர் ஏற்பாடு செய்கின்றனர். இந்நிலையில், வார இறுதி நாட்களில் புதுச்சேரிக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவதன் காரணமாக நகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றது.
மேலும் கடும் வெயிலின் தாக்கத்தால் சிக்னலில் நிறுகும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை முதலமைச்சர் ரங்கசாமி கார் செல்லும்போது சிக்னல்களை நிறுத்தி வைத்து முதல்வரை மட்டும் செல்ல காவல் துறையினர் வழிவிட்டனர். அப்போது அவர் மூன்று வழிகளிலும் கடும் வெயிலில் மக்கள் காத்திருப்பதை கண்டார். இதனைத்தொடர்ந்து போக்குவரத்து காவல்
துறை அதிகாரிகளை அழைத்து தனது கார் வரும் போது எந்த சிக்னலையும் நிறுத்தக்கூடாது. மக்களோடு மக்களாக நின்று முறைப்படி சாலையை கடக்கிறேன். எனக்காக மக்கள் பாதிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் தான் வரும் பாதையை போக்குவரத்து சிக்னலில் உள்ள காவலர்களுக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் கொடுத்து அவர்களை சிரமப்படுத்த வேண்டாம் என தனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, இன்று காலை வழக்கம் போல் சட்டப்பேரவை வருகை தந்த முதலமைச்சர் ரங்கசாமி, அனைத்து சிக்னல்களிலும் மக்களோடு மக்களாக நின்று தனது காரில் சென்றார். வெயிலில் பொதுமக்கள் அவதிப்படக்கூடாது என்ற நோக்கத்தோடு செயல்படும் முதலமைச்சர் ரங்கசாமியின் இந்த செயல் அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா









