மக்களோடு இருங்கள்… மக்களுக்காக இருங்கள்: முதலமைச்சர்

மக்களோடு இருங்கள்…மக்களுக்காக இருங்கள் என்று உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாமின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதன்…

மக்களோடு இருங்கள்…மக்களுக்காக இருங்கள் என்று உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாமின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதன் முதலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் நான் தான் என்று கூறினார். மக்கள் கொடுத்தது மேயர் பதவி இல்லை, மேயர் பொறுப்பு என்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தன்னிடம் தெரிவித்தாக கூறிய முதலமைச்சர், அதுபோல் நீங்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும், மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் என்று கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களோடு இருங்கள் மக்களுக்காக இருங்கள் என்று அறிவுறுத்தினார். ஒதுக்கப்படும் நிதியை சரியாக செலவு செய்ய வேண்டும். அதை நீங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இதை நீங்கள் செயல்படுத்த வேண்டும், செயல்படுத்துவீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, அனைத்து மக்களுக்கும் நீடித்த நிலைத்த வளர்ச்சியை கொடுப்பதே இந்த துறையின் நோக்கம் எனவும், எந்த சமயத்திலும் விதி மீறல்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்திய அவர், மக்கள் திமுக ஆட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கை மேலும் உறுதி பெரும் வகையில் உள்ளாட்சி பிரதிநிதிகளான உங்கள் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.