சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் தன்னை புகழ்ந்து பேச வேண்டாம் என ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று தொடங்கியது. இந்த அமர்வு அடுத்த மாதம் 10 ஆம் தேதி வரை 22 நாட்கள் நடைபெறுகின்றது. தினந்தோறும் கேள்வி நேரம், 110-ன் கீழ் முதலமைச்சரின் அறிவிப்புகள், மானியகோரிக்கை மீது அமைச்சர்கள் பதிலுரை ஆகியவை இடம் பெறுகின்றன. முதல் நாளான நேற்று நீர்வளத்துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
இந்நிலையில், இரண்டாவது நாளான இன்று கேள்வி நேரத்தின்போது ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா பேச தொடங்கினார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசினார். இதனிடையே குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி நேரத்தை, கேள்விக்காக மட்டுமே பயன்படுத்தவேண்டும். தன்னை புகழ்ந்து பேச கேள்வி நேரத்தை பயன்படுத்த வேண்டாம். குறிப்பாக ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.







