ஆளுநரின் தேநீர் விருந்து; சிபிஎம், விசிக, மமக புறக்கணிப்பு

தமிழ் புத்தாண்டையொட்டி இன்று நடைபெறும் ஆளுநரின் தேநீர் விருந்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்திற்கு…

தமிழ் புத்தாண்டையொட்டி இன்று நடைபெறும் ஆளுநரின் தேநீர் விருந்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்திற்கு அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். எனினும், நீட் உள்ளிட்ட விவகாரங்களில் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் ஆளுநரின் தேநீர் விருந்தை மார்க்சிஸ்ட், விசிக புறக்கணித்துள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், மாநில அரசின் குரலையும், மக்களின் கோரிக்கையையும் நிராகரிக்கும் வகையில் ஆளுநரின் செயல்பாடு அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்காதது, சட்டப்பேரவையின் மாண்பை சிறுமைப்படுத்தும் நடவடிக்கை என தெரிவித்த அவர், தமிழ் புத்தாண்டையொட்டி இன்று நடைபெறும் ஆளுநரின் தேநீர் விருந்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் சித்திரை 01- தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடும் மேதகு ஆளுநர் அவர்கள் அரசியல் கட்சித் தலைவர்களுக்குத் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். எனக்கும் அழைப்பு விடுத்துள்ள ஆளுநர் அவர்களுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநரின் தமிழர் விரோதப் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆளுநரின் சித்திரை நாளுக்கான தேநீர் விருந்து அழைப்பை விசிக புறக்கணிக்கிறது என்ற அவர், நீட் விலக்கு மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு விரைந்து அனுப்பி வைக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

இதுபோலவே மமக தலைவர் ஜவாஹிருல்லா, தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிராக தொடர்ச்சியாக செயல்பட்டு வரும் தமிழக ஆளுநர் அளிக்கும் தேனீர் விருந்தினை மனிதநேய மக்கள் கட்சி புறக்கணிக்கும் என்று அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.