முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த ஒரே சாதனை அவரது மகன் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கியது தான் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சிவகங்கையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில்
அதன் தற்காலிக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு
சிறப்புரையாற்றியதுடன் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னதாக தொண்டர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, பல்வேறு வழக்குகளை திமுகவினர் போட்டாலும் அத்தனை வழக்குகளையும் எம்.ஜி.ஆர் வென்று நல்லாட்சியை கொடுத்தார். ஆனால் இன்று கொலை, கொள்ளை ஆட்சி நடக்கிறது. இதனை மக்களிடம் சென்று சொல்லி விடுவோம் என்கிற பயத்தில் நமது கூட்டத்தை நடத்த விடாமல் தடுத்து வருகின்றனர். இவர்களுடைய பி.டீம் ஒன்று உள்ளது. பி.டீமை வைத்துக் கொண்டு அதிமுகவை முடக்கிவிட நினைத்தால் முடியாது.
எப்பொழுது ஆட்சிக்கு வந்தாலும் அதிமுகவை முடக்குவதை மட்டுமே வேலையாக செய்து வருகின்றனர். திமுக 22 மாத ஆட்சியில் மிக பெரிய அவப்பெயரை பெற்றுள்ளது. திமுக ஆட்சியில் எந்த ஒரு நலத்திட்டமும் இல்லை. வேலுநாச்சியாருக்கு மணிமண்டபம், உப்பாற்றில் தடுப்பனை கட்டியது என பல்வேறு திட்டங்களை அதிமுக நிறைவேற்றி உள்ளது.
கீழடி அருங்காட்சியகம் அமைக்க முதல்கட்ட நிதியான 12 கோடியை ஒதுக்கியது அதிமுக அரசு. குடிமராமத்து திட்டத்தின் மூலம் 12 ஆயிரம் ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளது. 26 ஆயிரம் ஏரிகள் தூர் வாரப்பட்டுள்ளது. நீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும் என்பதற்காக குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தினோம். அந்த திட்டத்தையும் இந்த அரசு கைவிட்டுள்ளது.
திமுக ஆட்சியில் ஸ்டாலின் என்ன செய்தேன் என சொல்ல முடியுமா. அவருடைய சாதனை அவரது மகனை அமைச்சராக்கியதே. உதயநிதி ஸ்டாலினால் 150 படங்கள் முடங்கி உள்ளது. பேனாவை 82 கோடிக்கு செலவு செய்து வைக்கிறார்கள். எழுதாத பேனாவிற்கு 82 கோடியில் சிலை தேவையா?
திமுக போல் குடும்ப கட்சியல்ல அதிமுக. அதிமுக என்பது தொண்டர்களால் ஆன கட்சி.
ஏழைகளுக்கான திட்டத்தை முடக்கினால் அதனை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தங்கம் ஒரு பவுன் 45 ஆயிரம் விற்பனை செய்யப்படுகிறது. ஏழை எளிய மக்களால் வாங்க முடியுமா? ஆனால் அதனை வழங்கிய திட்டத்தை திமுக முடக்கியுள்ளது.
அதிமுக ஆட்சியில் முதியோர் உதவி தொகை வழங்கபட்டது. ஆனால் திமுக ஆட்சியில் 7 லட்சம் பேருக்கு உதவி தொகையை நிறுத்தியுள்ளார்கள். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கு உதவி தொகை என அறிவித்தார்கள். ஆனால் தற்சமயம் தகுதியுள்ள பெண்களுக்கு என தெரிவித்து வருகிறார்கள். மக்களை ஏமாற்றுவதில் கில்லாடி திமுக.
நகரம் முதல் கிராமம் வரை வீட்டு வரியை 150 சதவீதம் உயர்த்தியுள்ளார்கள். அதிமுக ஆட்சியில் தடையில்லா மின்சாரம் வழங்கினோம். நான் ஒரு விவசாயி என்பதால் அனைத்து விவசாயிகளுக்கு முழு நேர மும்முனை மின்சாரம் வழங்கினோம். ஆனால் இந்த ஆட்சியில் பகுதி நேர மின்சாரம் மட்டுமே வழங்கப்படுகிறது.
கொரோனா காலத்தில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அதிமுக செய்தது. பொங்கல் தொகுப்பில் 21 பொருட்கள் வழங்கினார்கள். ஆனால் அந்த பொருட்கள் தரமில்லை. அப்படிப்பட்ட பொருட்களை வழங்கியவர் தான் இந்த முதல்வர். ஏழைகளுக்கு வழங்கும் அத்தியாவசிய பொருளில் கூட ஊழல் செய்தது திமுக அரசாங்கம் தான். இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி தான் என கூறினார்.







