திமுக இளைஞர் அணி செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் என நான்கரை ஆண்டுகள் உழைத்து தான், படிப்படியாக தான் விளையாட்டு துறை அமைச்சராக உள்ளேன் என உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கலகத் தலைவன்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் இயக்குநர் மு.மாறன் இயக்கும் ’கண்ணை நம்பாதே’ படத்தில் உதயநிதி நடித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இத்திரைப்படத்தில் ஆத்மிகா, சதீஷ், பூமிகா சாவ்லா, பிரசன்னா, ஸ்ரீகாந்த், வசுந்தரா உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சித்துக்குமார் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லிப்பி சினி கிராப்ட்ஸ் சார்பில் வி.என்.ரஞ்சித்குமார் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
இந்நிலையில் சென்னையில் கண்ணை நம்பாதே திரைப்படக் குழுவினர் செய்தியாளர் சந்தித்தனர். அப்போது அப்படத்தின் கதாநாயகனும், அமைச்சருமான உதயநிதி செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசுகையில், நான் நடித்த படங்களில் மிக நீண்ட நாட்களில் எடுக்கப்பட்ட படம் கண்ணை நம்பாதே திரைப்படம். இப்படம் தொடங்கும் போது கட்சியில் இருந்தேன். படம் நிறைவடையும் போது அமைச்சராக இருக்கிறேன். திமுக இளைஞர் அணி செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் என நான்கரை ஆண்டுகள் உழைத்து தான், படிப்படியாக நான் தற்போது விளையாட்டு துறை அமைச்சராக உள்ளேன் என கூறினார்.