“ சட்டப்பேரவையை சூட்டிங் ஸ்பாட்டாக மாற்றிவிட்டார் முதலமைச்சர்” – உதயநிதி ஸ்டாலின்

முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையை சூட்டிங் ஸ்பாட்டாக மாற்றிவிட்டார் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தமிழ் நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்து பேசிnஆர். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின் வெட்டு, போதைப்பொருள் புழக்கம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்கள் அனைத்திற்கும் கடந்த திமுக அரசு தான் காரணம் என்று கூறினார். டாஸ்மாக்கில் கட்சி நிதி என்ற பெயரில் வசூலித்ததாக திமுகவை கடுமையாக விமர்சித்தார்.

முதலமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதற்கு பதிலளிக்க வாய்ப்பு வேண்டும் என்று கூறி திமுக எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். ஆனால் அனுமதி வழங்கப்படாததால் வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில் சட்டமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது,

பேசுவதற்கு அனுமதி கொடுக்கவில்லை

“ உண்மைக்கு புறம்பான தகவல்களை முன் வைத்துள்ளனர். ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து பேசுவதற்கு கால அவகாசம் கேட்டோம். ஆனால் சபாநாயகர் அனுமதி கொடுக்கவில்லை. நேற்று முதலமைச்சரிடம் நாங்கள் பல்வேறு கேள்விகளை முன் வைத்தோம். அதற்கு எந்த பதிலும் வரவில்லை. கேட்ட கேள்விகளுக்கு நாங்கள் வீட்டிற்கு சென்ற பிறகு பதில்களை தெரிவிக்கின்றனர். இன்று முதலமைச்சர் உண்மைக்கு புறம்பான விஷயங்களை சொல்கிறார். முதலமைச்சர் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு என்ன ஆதாரங்கள் இருக்கிறது என்று நாங்கள் கேட்டோம். அதற்கும் எந்த ஆதாரமும் கொடுக்கவில்லை”.

முறையான பதில் இல்லை

முதலமைச்சர் இன்று ஒரு ஸ்கிரிப்ட்டை கொண்டுவந்துள்ளார். அந்த ஸ்கிரிப்ட் முழுவதும் படிக்கும் வரை யாரும் பதில் சொல்லக்கூடாது என்று சபாநாயகர் கூறுகிறார். முதலமைசசர் ஊடகங்களுக்கும் பதில் சொல்ல வில்லை, சட்டப்பேரவையில் எங்களுக்கும் பதில் சொல்ல வில்லை. என்ன நடந்தாலும் திமுக மீது பழி போடுவதை இந்த அரசு ஒரு வழக்கமாக வைத்துள்ளது. ஆளுநர் சட்டப்பேரவைக்கு வரும்போது தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும். இறுதியாக நிகழ்ச்சி முடியும் போது தேசிய கீதம் பாடப்பட வேண்டும். ஆனால் இந்த முறை மரபு மீறப்பட்டுள்ளது. இதுகுறித்து கேள்வி எழுப்பியதற்கு எந்த ஒரு பதிலும் இல்லை. நான் முதல்வன் திட்டம், மின்வெட்டு உள்ளிட்ட எந்த கேள்விக்கும் முறையாக பதிலளிக்காமல் ஏதேதோ குற்றச்சாட்டுகளை முன்வைகின்றனர். விவசாய கடன் பயிர் கடன் தள்ளுபடி குறித்த கேள்விக்கு விவசாயிகளை திமுக தூண்டிவிட்டு போராட்டங்கள் நடத்த முயற்சிக்கிறது என்று கூறுகிறார். விவசாயிகளை முதலமைச்சர் கொச்சைப்படுத்துகிறார். ஒவ்வொரு நாளும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆளுங்கட்சி சார்ந்தவர்களே அனைத்து சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். முதலமைச்சர் ஏன் அதிமுகவின் ஒரு சில சட்டமன்ற உறுப்பினர்களை மட்டும் சந்தித்தார்?, ஏன் ஒவ்வொரு முறை சந்திக்கும் பொழுது சோபா அவர்கள் வீட்டிற்கு சென்றது?

சூட்டிங் ஸ்பாட்டாக மாறிய சட்டப்பேரவை

முதலமைச்சர் சூட்டிங் ஸ்பாட்டிற்கு வருவது போல் சட்டப்பேரவைக்கும் வந்துள்ளார். சூட்டிங்கில் டயலாக்கை மனப்பாடம் செய்து பேசுவதுபோல் முதலமைச்சர் பேசுகிறார். ஆடியோ லான்ச் நிகழ்ச்சிக்கு செல்வது போல் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். அமைச்சர்கள் இன்னும் சில காலங்களில் டான்ஸ் ஆட உள்ளார்கள் என நினைக்கிறேன். சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆக வேண்டும் என நினைத்து அவர்கள் பணிகளை செய்து வருகிறார்கள். இன்று பேசிய பேச்சுக்கூட சோசியல் மீடியாவில் ட்ரெண்டாக வேண்டும் என நினைத்துப் பேசி உள்ளார்கள். முதலமைச்சர் சட்டப்பேரையிலும் நடிக்க தொடங்கி விட்டார். இனி தலைமைச் செயலகத்திற்கு மேக்கப் மென், கேரவன் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் அனைவரும் வந்து விடுவார்கள். இரண்டு நாளாக ரிகர்சல் பார்த்துவிட்டுஒரு சினிமா பாட்டு போல் இந்த சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி ஒரு கேலிக் கூத்து ஆட்சியாக இருக்குகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.