பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக 2 நாள் பயணமாக மதுரை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று மாலை கீழடி அருங்காட்சியத்தை திறந்து வைக்கிறார்.
தமிழகத்தில் ’கள ஆய்வில்’ முதலமைச்சர் என்ற திட்டத்தின் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் நேரில் சென்று அங்குள்ள வளர்ச்சி பணிகள், சட்டம் – ஒழுங்கு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக இன்று மதுரை சென்றுள்ளார்.
காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்ற அவர், முதலில்
அழகர்கோவில் சாலையில் உள்ள சுற்றுலா விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்னர் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
இந்த கூட்டத்தில் அரசின் வளர்ச்சி திட்டங்கள், மாவட்டத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதனை அடுத்து மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாலை கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார். முதலமைச்சரின் வருகையையொட்டி மதுரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் நாளை (6-ஆம் தேதி) இரவு, நாகர்கோவிலில் தங்கும் அவர், 7-ஆம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு, தூத்துக்குடியில் இருந்து பிற்பகல் 2 மணி அளவில் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
பி.ஜேம்ஸ் லிசா








