அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த சிறுமி டான்யாவின் குடும்பத்திற்கு இலவச வீட்டுமனை பட்டாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொண்டார். மாவட்ட தீயணைப்பு அலுவலர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இருசம்மாள் மற்றும் தீயணைப்போர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 120 நபர்களுக்கு அவர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இதனை தொடர்ந்து தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநிலம் முழுவதும் நடைபெற்ற திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்ற 124 மாணவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை முதலமைச்சர் வழங்கினார்.
இதனை அடுத்து, மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டிற்கான செயல்பாட்டில் இந்திய அளவில் தமிழ்நாடு மூன்றாம் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டதற்கான விருது மற்றும் சான்றிதழை முதலமைச்சர் ஸ்டாலினிடம் காண்பித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாழ்த்து பெற்றார்.
மேலும், அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த சிறுமி டான்யாவின் குடும்பத்திற்கு 1.48 லட்சம் மதிப்புள்ள பட்டா நிலத்தை இலவச வீட்டுமனை பட்டா மற்றும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் ரூ.2.10 லட்சம் மதிப்பில் வீடு கட்டிக்கொள்ள அனுமதி ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
- பி.ஜேம்ஸ் லிசா







