சென்னையை சேர்ந்த 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
சென்னையை சேர்ந்த சிறுமி தன்னுடன் பள்ளியில் பயிலும் சக மாணவியின் வீட்டிற்கு தினமும் படிக்க சென்றுள்ளார். அப்போது சக மாணவியின் தந்தை மயக்க மருந்து கலந்த பிஸ்கெட்டை சிறுமிக்கு கொடுத்து அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறவே அதிர்ச்சியடைந்த அவளது பெற்றோர் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ரியல் எஸ்டேட் அதிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இவ்வழக்கு சென்னை உயர்நீதி மன்ற வளாகத்திலுள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எம்.ராஜலட்சுமி குற்றவாளிக்கு எதிரான குற்றசாட்டுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு இடமின்றி நிருபிக்கப்பட்டதால் ரியல் எஸ்டேட் அதிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும்,50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் அவரிடமிருந்து வசூலிக்கப்படும் அபராத தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டும் எனவும், அரசு சார்பில் சிறுமிக்கு இழப்பீடாக 7லட்ச ரூபாய் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
-வேந்தன்







