கர்நாடகாவின் முதலமைச்சராக பதவியேற்க உள்ள சித்தராமையாவின் அரசியல் பயணத்தை தற்போது பார்ப்போம்…
1983-ம் ஆண்டு தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய சித்தராமையா, பாரதிய லோக்தள் கட்சியின் சார்பில் போட்டியிட்டு சாமுண்டேஸ்வரி தொகுதியின் எம்எல்ஏவாக வெற்றிபெற்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன் பின்னர் ஆளும் ஜனதா கட்சியில் சேர்ந்த சித்தராமையா, அப்போதைய முதலமைச்சர் ராமகிருஷ்ண ஹெக்டே தலைமையிலான அரசில் கால்நடை வளர்ப்புத் துறை அமைச்சராக பதவி வகித்தார்.
1992ம் ஆண்டு ஜனதா தளம் கட்சியில் சேர்ந்த சித்தராமையா, முதலமைச்சர் தேவகவுடா தலைமையிலான அரசில் நிதியமைச்சரானார்.
இதைத் தொடர்ந்து பாட்டீல் தலைமையிலான அரசில் துணை முதலமைச்சராக பதவி வகித்தார். பின்னர் துணை முதலமைச்சர் பதவியிலிருந்தும் ஜனதா தளம் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்ட சித்தராமையா, அக்கட்சியில் பிளவு ஏற்பட்டபோது தேவகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் சேர்ந்தார்.
1999 முதல் 2004 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் அமைத்த முதலமைச்சர் தரம்சிங் தலைமையிலான கூட்டணி அரசில் துணை முதலமைச்சரானார். 2005 ஆம் ஆண்டு தேவகவுடாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சித்தராமையா, அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
கர்நாடகாவின் மூத்த அரசியல் தலைவரான சித்தராமையா, 2013ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை ஐந்தாண்டுகள் அம்மாநில முதலமைச்சராக பதவி வகித்தார். 2018ம் ஆண்டு முதல் பதாமி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக இருந்து வரும் சித்தராமையா, இதற்கு முன்பு வருணா, சாமுண்டேஸ்வரி தொகுதிகளின் எம்எல்ஏவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இரண்டு முறை கர்நாடக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இரண்டு முறை துணை முதலமைச்சராகவும் சித்தராமையா இருந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சித்தராமையா, அக்கட்சியின் செயற்குழு உறுப்பினராவார்.