சீர்காழியில் 32 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற சட்டைநாதர்சுவாமி கோயில் குடமுழுக்கில், ஹெலிகாப்டர் மூலம் மலர், புனித நீர் தெளிக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டை நாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள்பாலிக்கிறார். மேலும் திருஞானசம்பந்தர், அஷ்ட பைரவர்களுக்கு தனி சன்னதியும் உள்ளது. மலைமீது தோணியப்பர் – உமாமகேஸ்வரி அம்மன், சட்டைநாதர் ஆகிய தெய்வங்கள் 3 நிலைகளில் காட்சி தருகின்றனர். காசிக்கு அடுத்தப்படியாக அஷ்ட பைரவர்கள் இக்கோயிலில் தெற்கு கோபுரம் அருகே தனி சன்னதியில் காட்சி தருகின்றனர்.
40 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டிருந்த மேற்கு கோபுர வாசல் கடந்த வாரம் திறக்கப்பட்டது. தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் மேற்கு கோபுர வாசலில் சிறப்பு பூஜைகள் செய்த பின்னர், கோபுர வாசல் திறக்கப்பட்டது. மேள, தாளங்கள் முழங்க தருமபுரம் ஆதீனம் தலைமையில் பக்தர்கள் கோயிலுக்குள் சென்றார்கள்.
கடந்த சனிக்கிழமை 8 கால யாகசாலை பூஜைகள், 11 பரிவார தெய்வங்கள் சன்னதிகளுக்கு குடமுழுக்கு விழா நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து, இன்று நான்கு கோபுரங்கள், சுவாமி அம்மன் விமான கலசங்கள், மலைக்கோயில் விமான கலசம் உள்ளிட்டவைகளுக்கு மகா குடமுழுக்கு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆதிகேசவலு, செளந்தரராஜன், அரசு உயர்அதிகாரிகள் மற்றும் பல்வேறு மடத்து ஆதீனங்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
குடமுழுக்கின் போது, ஹெலிகாப்டர் மூலம் வானிலிருந்து மலர்கள் தூவி, புனித நீர் தெளிக்கப்பட்டது. சீர்காழியை அடுத்த தென்பாதியில் உள்ள இமயவரம்பன் கார்டனில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்பட்டிருந்தது. ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவியதால் பக்தர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.







