பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க மத்திய அரசுக்கு அனுமதி வழங்கப்படாது என தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. என்.எல்.சி மூன்றாவது நிலக்கரி சுரங்கத்தின் பெரும்பகுதி காவிரிப் படுகையை ஒட்டியே அமைந்துள்ள நிலையில், மீதமுள்ள 6 நிலக்கரி சுரங்கங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தஞ்சை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், மொத்தம் 66 இடங்களில் ஆழ்துளையிட்டு நிலக்கரி எடுப்பதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள 11 இடங்களிலும், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்திலும் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு முடிவு – விவசாயிகள் கடும் எதிர்ப்பு!
இதனிடையே, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசுக்கு அனுமதி வழங்கப்படாது என தொழில்துறை உயர் அலுவலர்கள் நியூஸ் 7 தமிழுக்கு தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் சட்டத்தின்படி நிலக்கரி இருக்கிறதா என்பது குறித்த ஆய்வுகளை மட்டும் மேற்கொள்ளலாம் என கூறியுள்ளனர். நிலக்கரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், மாநில அரசு அனுமதித்தால் மட்டுமே நிலக்கரி எடுக்க முடியும் என்றும், விவசாயிகள் பதற்றமடைய வேண்டாம் எனவும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.








