தமிழ்நாட்டில் நிலவும் தொடர் மின்வெட்டுக்கு ஒன்றிய அரசே பொறுப்பேற்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம், புவனகிரி, மழவராய நல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு தாரை வார்க்கும் செயலில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருவதாகவும், இதனை கண்டுகொள்ளாமல் அதிமுகவும் உடந்தையாக செயல்பட்டுவருவதாக சாடினார். தமிழ்நாட்டில் நிலவி வரும் தொடர் மின் வெட்டுக்கு பாஜக அரசே காரணம் எனவும், பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து 8 மணிநேரம் மின் வெட்டு நிலவி வருவதாகவும் திருமாவளன் தெரிவித்தார்.
முன்னதாக, தமிழ்நாட்டின் ஒருநாள் மின் தேவையை பூர்த்தி செய்ய 72ஆயிரம் டன் நிலக்கரி தேவையாக உள்ள நிலையில், 48 ஆயிரம் டன் முதல் 50 ஆயிரம் டன் மட்டுமே கிடைப்பதால், மின் பற்றாக்குறை உள்ளதாக கூறினார். மத்திய தொகுப்பிலிருந்து வரவேண்டிய 716 மெகாவாட் மின்சாரம் வராததும், மின்தடைக்கு காரணம் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







