இரட்டை இலை சின்ன முறைகேடு வழக்கில், தாம் ஒரு நிரபராதி என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து விளக்கியதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது தேர்தல் கமிஷன் முடக்கிய இரட்டை இலை சின்னத்தை பெற அதிகாரிகளுக்கு டிடிவி.தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீஸ் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பாக தினகரன் கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணை டெல்லி திஸ்ஹசாரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில் டி.டி.வி.தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. மேலும், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன்படி, நேற்று டி.டி.வி.தினகரன் ஆஜரானார். ஏற்கனவே, நடைபெற்ற விசாரணையில், இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களை எடுத்துவரும்படி, அமலாக்கத்துறை அறிவுறுத்தி இருந்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், அமலாக்கத் துறை அலுவலகத்தில், டி.டி.வி. தினகரன், ஆவனங்களுடன் ஆஜராகி, வழக்கு தொடர்பாக விளக்கமளித்தார்.







