” பாரதம் என்று மத்திய அரசு மாற்றுவதில் உள்நோக்கம் உள்ளது “ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு பாரத குடியரசுத் தலைவர் என குறிப்பிட்டு அழைப்பிதழ் அளிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகை தரும் விருந்தில் பங்கேற்க அனுப்பிய அழைப்பிதழில் உள்ள வார்த்தைகளால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
டெல்லியில் உள்ள ஜி 20 மாநாடு பிரகதி மைதானத்தில் வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு குடியரசு தலைவர் விருந்தளிக்கிறார். அதற்காக அவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதிலாக பாரத் குடியரசு தலைவர் என அச்சிடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
மேலும் பிரதமர் மோடி அரமுறைப் பயணமாக இந்தோனேஷியா செல்ல உள்ள நிலையில் அவரது பயணம் குறித்து வெளியான நிகழ்ச்சி நிரலில் ”Prime Minister of Bharath” என குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையாகியுள்ளது. இந்த நிலையில் இதற்கு நாடு முழுவதும் பெரும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘இந்தியா’ என்று பெயர் வைத்த காரணத்தால்தான் மத்திய பாஜக அரசு அந்த பெயரை மாற்ற முயற்சிப்பதாக குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளதாவது..
’’இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் விதி, “இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்” என்று கூறுகிறது. அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், இந்திய தொழில்நுட்பக் கழகம், மற்றும் இந்திய மேலாண்மை கழகம் போன்ற இவை அனைத்திலும் இந்தியா இருக்கிறது.
‘பாரதம்’ என்று மத்திய அரசு மாற்றுவதன் நோக்கம் என்ன? அதன் உள்நோக்கம் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. எதிர்க்கட்சிகளும் மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்று கூடி ‘இந்தியா’ என்ற பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் பாஜக கொந்தளித்து தற்போது இந்தியாவுக்கு பதிலாக ‘பாரதம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
‘பாரதம்’ என்பதற்கும் எதிர்க்கட்சிகள் விரிவாக்கத்தை(abbreviation) உருவாக்கினால் பாஜக என்ன செய்யும்?’’ என சீதாராம் யெச்சூரி கேள்வி எழுப்பியுள்ளார்.