முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

இந்தி தினம் கொண்டாடும் மத்திய அரசு, மாநில மொழி தினத்தை கொண்டாடாதது ஏன்? – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி

மத்திய அரசு, ஆங்கிலத்தை அகற்றுவதே இந்தியை அந்த இடத்தில் அமர்த்துவதற்காகத்தான் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்தைக் கொண்டுவந்து முதலமைச்சர் ஸ்டாலின் உரையில், தமிழ் மொழியைக் காப்பதற்காக மட்டுமல்ல ஆதிக்க மொழித்திணிப்புக்கு எதிராக என்றும் குரல் கொடுப்பவர்கள் என்ற அடிப்படையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்மானத்தை இந்த மாமன்றத்தில் முன்மொழிய விரும்புகிறேன் என்று குறிப்பிட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழ் காக்க சிறை சென்று சிறைச்சாலையில் மரணம் அடைந்த நடராசன் – தாளமுத்து தொடங்கி தீக்குளித்த கீழப்பழுவூர் சின்னச்சாமி, துப்பாக்கிக் குண்டுக்குப் பலியான சிதம்பரம் ராசேந்திரன் வரையிலான தியாகிகளை இந்த நேரத்தில் நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். மொழி என்பது நமது உயிராய்,உணர்வாய்,விழியாய், எதிர்காலமாய் இருக்கிறது. அத்தகைய மொழியை வளர்க்கவும், பிறமொழி ஆதிக்கத்தில் இருந்து காக்கவுமுமே திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியது. தோன்றிய காலம் முதல் இன்று வரை மொழிக்காப்பு இயக்கமாகவே திமுக இருந்து வருகிறது. 1938-ம் ஆண்டு முதல் இந்தி மொழித் திணிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நாமும் எதிர்த்துக் கொண்டே இருக்கிறோம். ஆதிக்க சக்திகளும் விடுவதாக இல்லை; நாமும் விடுவதாக இல்லை; இது வெறும் மொழிப் போராட்டம் மட்டுமல்ல என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார். தமிழினத்தை, தமிழர் பண்பாட்டைக் காக்கும் போராட்டமாக நாம் தொடர்ந்து கொண்டு இருக்கிறோம், தொடரவே செய்வோம் என்று இந்த பேரவையின் மூலமாக தமிழ்நாட்டு மக்களுக்கு நான் உறுதி அளிக்கிறேன் என்று தெரிவித்தார்.

இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசானது இந்தி மொழியைத் திணிப்பதை தனது வழக்கமாகவே வைத்துள்ளது. ஆட்சி நிர்வாகத்தில் இந்தியைத் திணிப்பது தொடங்கி கல்வி மூலமாகத் திணிப்பது வரை தாங்கள் ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தியைத் திணிப்பது தான் என்று நினைக்கிறார்கள். ஒரே நாடு,ஒரே மதம், ஒரே தேர்தல், ஒரே தேர்வு, ஒரே உணவு, ஒரே பண்பாடு என்ற வரிசையில் ஒரே மொழியை வைத்து மற்ற தேசிய இன மக்களின் மொழிகளை அழிக்கப் பார்க்கிறார்கள். இந்தியா என்பது பன்முகத் தன்மை கொண்ட நாடு; பல்வேறு இனங்கள், மொழிகள், மதங்கள், கலாச்சாரங்கள் கொண்ட மக்கள் வாழும் நாடு இந்தியா. வேற்றுமையிலும் ஒற்றுமை கண்டு, ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். சுதந்திரம் பெற்ற இந்தியா, ஓராண்டு கூட ஒற்றுமையாக இருக்காது என்று வெளிநாட்டுப் பத்திரிக்கைகள் எழுதிய நிலையில் நமது பன்முகத் தன்மையைக் காப்பதன் மூலமாக இந்தியா எழுபத்தைந்து ஆண்டுகளாகக் காப்பாற்றப்பட்டு வருகிறது. பல்வேறு மொழியினர் வாழும் நாடு இது. ஆனாலும் மொழிவாரியாக மாகாணங்கள் பிரிக்கப்பட்டதால் அனைத்து மொழியினரும் மனநிறைவோடு வாழ்ந்து வருகிறார்கள் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  தெரிவித்தார்.

பல்வேறு மத நம்பிக்கையாளர்கள் இருந்தாலும், இந்தியா மதச்சார்பற்ற நாடாகவே அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மொழி பேசுபவர்களின் நாடாக இருந்தாலும் ஒரு மொழியின் ஆதிக்கம் இருக்காது என்பதை இந்தியாவை ஆண்ட பிரதமர்கள் உறுதிப்படுத்தி வந்திருக்கிறார்கள். ‘இந்தி பேசாத மக்கள் மீது இந்தி மொழி திணிக்கப்படாது, அவர்கள் விரும்பும் வரை ஆங்கிலம் ஆட்சிமொழியாக நீடிக்கும்’ என்று பிரதமர் நேரு அவர்கள் அளித்த உறுதி மொழி தான் இன்று இந்தி பேசாத பெரும்பான்மை மக்களைக் காக்கும் அரணாக இருக்கிறது. அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கியதாக ஐந்தாண்டுத் திட்டங்களும், பொதுத்துறை நிறுவனங்களும் அமைக்கப்பட்டன. இப்படி நடந்ததால் தான் எல்லையால் மட்டுமல்ல, எண்ணங்களாலும் ஒற்றுமை கொண்ட நாடாக இந்திய நாடு விளங்கி வருகிறது. இதற்கு குந்தகம் ஏற்படுத்தும் செயல்கள் சமீப காலமாக நடந்து வருகின்றன. இதில் மிகமிக முக்கியமானது இந்தி மொழித் திணிப்பு ஆகும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார்.

இந்தி மொழித்திணிப்பை பட்டவர்த்தனமாக பாஜக அரசு செய்கிறது. இந்தி மொழி தினம் கொண்டாடும் ஒன்றிய அரசு, மற்ற மாநில மொழிகளின் தினம் கொண்டாடுவது இல்லை. இந்தி மொழிக்கு தரப்படும் முக்கியத்துவம் என்பது மற்ற மொழிகளைப் புறக்கணிப்பதாக மட்டுமில்லை, அழிப்பதாகவும் அமைந்திருக்கிறது. இந்தியை ஆட்சி மொழியாக, அலுவல் மொழியாக மட்டுமல்ல அதிகாரம் செலுத்தும் மொழியாக பாஜக அரசு உயர்த்திக் கொண்டு இருக்கிறது. மேலாதிக்கம் செலுத்தும் மொழியாக அதனை மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்தியை வலுப்படுத்தவே துடிக்கிறார்கள்

இந்தியும், ஆங்கிலமும் தான் அலுவல் மொழியாக இருக்கிற நிலையில், ஆங்கிலத்தை மொத்தமாக அகற்றப் பார்க்கிறது பாஜக அரசு. இந்தி பேசும் மாநிலங்களில் இந்தியை வலுப்படுத்தும் போர்வையில், இந்தியா முழுவதும் இந்தியை வலுப்படுத்தவே துடிக்கிறார்கள். கேந்திரிய வித்தியாலயா பள்ளி முதல் ஐஐடி வரை இந்தி மட்டும் தான் என்றால் மற்ற மொழி மக்களுக்கும் இந்த கல்வி நிறுவனங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தடுக்க நினைக்கிறார்கள். ஆங்கிலத்தை முற்றிலுமாக தடுப்பதன் மூலமாக ஆங்கில அறிவையே முற்றிலுமாக தடுக்கிறார்கள்.

ஆங்கிலத்தை அகற்றுவதே இந்தியை திணிக்கத்தான்

மாநில மொழி என்று ஒப்புக்காகச் சொல்கிறார்களே தவிர, முழுக்க முழுக்க இந்திக்காகவே துடிக்கிறது அவர்களது இதயம். அனைத்துத் தேர்வுகளிலும் கட்டாய ஆங்கில மொழி வினாத்தாள் இருப்பதைக் கைவிடச் சொல்வதன் மூலமாக, அனைத்து இந்தியத் தேர்வுகளையும் இந்தி மயமாக்கத் துடிக்கிறார்கள். இனி நடக்கும் அனைத்துத் தேர்வுகளும் இந்தியில் தான் என்று சொல்வதன் மூலமாக, இந்தி பேசும் மாநில மக்களுக்கு மட்டும் தான் இனி அனைத்திந்திய பணி இடங்கள் என்பதை வெளிப்படையாக அறிவித்துவிட்டார்கள். ஆங்கிலத்தை அகற்றுவதே இந்தியை அந்த இடத்தில் அமர்த்துவதற்காகத்தான். இன்றைக்கு ஆங்கிலத்தை அகற்றுவதற்கு பின்னால் இந்தியைக் கொண்டு வந்து உட்கார வைக்கும் மறைமுகத் திட்டம் தான் இருக்கிறது என்பதை சட்டப்பேரவையில் அழுத்தம் திருத்தமாகத் தெரிவிக்க விரும்புவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நுபுர் ஷர்மாவை கைது செய்ய வேண்டும்: மம்தா பானர்ஜி

Mohan Dass

செய்தி எதிரொலி; காவல் துறையினரால் தள்ளிவிடப்பட்ட பெண்ணுக்குப் பணி

Arivazhagan Chinnasamy

மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா லெஜன்ட்ஸ் அணி

EZHILARASAN D