முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட 4 பேரை விசாரிக்குமாறு ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமியின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், வி.கே.சசிகலா, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கே.எஸ்.சிவகுமார் ஆகிய 4 பேரிடம் விசாரணை நடத்த வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இரு சாட்சிகளின் அடிப்படையில் டிசம்பர் 4-ஆம் தேதி மதியம் 3.50 மணிக்குள் அவர் இறந்துவிட்டதாக விசாரணையில் தெரிவதாக ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனைக்கு செல்வதற்கு 3 நாட்களுக்கு முன்பே ஜெயலலிதாவிற்கு காய்ச்சல் இருந்தது. உடல்நலக்குறைவு ஏற்பட்டபின் வெளிநாட்டு மருத்துவர்கள் பரிந்துரைபடி ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ அல்லது அறுவை சிகிச்சை ஏன் நடக்கவில்லை? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பல்லோ மருத்துவமனை பிரதாப் ரெட்டி பொய்யான அறிக்கையை வெளியிட்டதாகவும், எனவே பிரதாப் ரெட்டியை விசாரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஜெயலலிதாவின் உடல்நலக்குறைவு, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்த அப்போலோ நிர்வாகம் தவறியது.
ஜெயலலிதா மயக்கமடைந்த பிறகு நடந்த நிகழ்வுகள் ரகசியமாக வைக்கப்பட்டன. ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்ற ஒரு பொய்யான அறிக்கை அப்பல்லோ மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டது. ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்படவில்லை. ரிச்சர்ட் பீலே, ஸ்டூவர்ட் ரஸ்ஸல், ஷமின் சர்மா ஆகிய மருத்துவர்கள் ஆஞ்சியோவுக்கு பரிந்துரைத்தனர். ஆனால் ஆஞ்சியோ சிகிச்சை இறுதிவரை ஜெயலலிதாவுக்கு வழங்கப்படவில்லை என ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது.







