“Hindi பேசாத மாநிலங்களில் ‘இந்தி மாதம்’ கொண்டாடுவது பிற மொழிகளை சிறுமைப்படுத்தும் முயற்சி” – பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் #MKStalin கடிதம்!

சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டங்களுடன் இந்தி மாதம் நிறைவு நாள் விழா கொண்டாடப்படுவது வருங்காலங்களில் தவிர்க்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பில்…

"Celebrating 'Hindi month' in non-Hindi speaking states is an attempt to trivialize other languages" - Chief Minister #MKStalin's letter!

சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டங்களுடன் இந்தி மாதம் நிறைவு நாள் விழா கொண்டாடப்படுவது வருங்காலங்களில் தவிர்க்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டங்களுடன் இணைந்து ‘இந்தி மாதம்’ நிறைவு நாள் விழா கொண்டாடப்படுவது எதிர்வருங்காலங்களில் தவிர்க்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா நிகழ்ச்சிகளுடன் இணைந்து 18-10-2024 அன்று நிறைவடையும் ‘இந்தி மாத’ நிறைவுவிழா நடைபெறுவது குறித்து பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவரவே இந்தக் கடிதத்தை தாம் எழுதுவதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், அவ்விழாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் தலைமை தாங்கி நடத்தவிருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த மொழிக்கும் தேசிய மொழி என்ற அந்தஸ்தை வழங்கவில்லை என்றும் சட்டமியற்றுதல், நீதித்துறை மற்றும் தகவல் தொடர்பு போன்ற அலுவல் நோக்கங்களுக்காக மட்டுமே இந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் பேசும் நாட்டில், இந்திக்கு தனி இடம் அளிப்பதும், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதும் பிற மொழிகளை சிறுமைப்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

எனவே, இந்தி பேசாத மாநிலங்களில் இதுபோன்ற இந்தி மொழி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதைத் தவிர்க்கலாம் அல்லது ஒன்றிய அரசு இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த விரும்பினால், அந்தந்த மாநிலங்களின் உள்ளூர் மொழிக்கான மாதக் கொண்டாட்டங்களையும் அதேபோல் கொண்டாடவேண்டும் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இந்திய அரசு செம்மொழியாக அங்கீரித்துள்ள அனைத்து மொழிகளின் சிறப்பையும் செழுமையையும் கொண்டாட இதேபோன்று சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று தாம் பரிந்துரைப்பதாகவும் இது அனைவரிடையேயும் ஒரு சுமுகமான உறவை மேம்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்”

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.