அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்கக்கூடாது என்ற வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் களத்துப்பட்டியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ். சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுக கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர்., பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கிய விதிகளுக்கு முரணாக ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இரட்டை தலைமை முறையை தவிர்த்துவிட்டனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, ஒற்றை தலைமையை உருவாக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி கட்சியின் முடிவுகளை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அதில் இடைக்காலக் கோரிக்கை வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அந்த வழக்கில் இறுதி முடிவெடுக்கும் வரை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாக எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது என்றும், அவரை தேர்ந்தெடுக்கும் வரையில், ஜூலை 11ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட (3,4,5,6,7) தீர்மானங்களை ஏற்கக் கூடாது
என்றும் உத்தரவிடவும் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி, நீதிபதி சுந்தர்மோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய்நாரயண், உள்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது என்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு நகலை சமர்பித்தார்.
மனுதாரர் ஆஜராகி ஏற்கனவே இதே அமர்வு பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளதால் வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.மேலும் எடப்பாடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட தீர்ப்பு நகலை படித்துபார்க்க அவகாசம் வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் இரண்டு வாரம் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
-இரா.நம்பிராஜன்








