ஆந்திராவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அல்லு அர்ஜுன் மீது அனுமதி இன்றி ஏராளமானவர்களை கூட்டம் சேர்த்ததாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : “2 மனைவிகள் உள்ளவர்களுக்கு ரூ.2 லட்சம்” – காங்கிரஸ் வேட்பாளரின் பேச்சால் சர்ச்சை…!
இதனைத் தொடர்ந்து 4ம் கட்ட வாக்குப்பதிவு மே 13-ம் தேதியும் (நாளை) , 5ம் கட்ட வாக்குப்பதிவு மே 20-ம் தேதியும், 6ம் கட்ட வாக்குப்பதிவு மே 25-ஆம் தேதியும், 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
ஆந்திர மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார். இந்நிலையில், ஆந்திரா சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் வரும் ஜுன் 11ம் தேதி முடிவடைய உள்ள நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆந்திராவில் சட்டசபை தேர்தலும் மற்றும் மக்களவைத் தேர்தலும் ஒன்றாக நாளை(மே-13ம் தேதி) நடைபெற உள்ளது. ஆந்திர மாநிலத்தில் மொத்தம் 175 சட்டசபை தொகுதிகள் உள்ளன. முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. மேலும், காங்கிரஸ் கட்சி, இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பாஜக மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
இதையும் படியுங்கள் : “2 மனைவிகள் உள்ளவர்களுக்கு ரூ.2 லட்சம்” – காங்கிரஸ் வேட்பாளரின் பேச்சால் சர்ச்சை…!
நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆந்திராவில் நேற்று பிரசாரம் முடிவடைந்தது. இதற்கிடையே, மாநிலத்தின் நந்தியாலா சட்டமன்ற தொகுதியில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரும் நண்பருமான ரவீந்திர கிஷோர் ரெட்டியின் வீட்டிற்கு அல்லு அர்ஜுன் தனது மனைவியுடன் சென்றார். தொடர்ந்து அப்பகுதியில் கூடியிருந்த ஆயிரக்கணக்கணக்கான மக்கள் முன்னிலையில் ரவீந்திர கிஷோருக்கு வாக்களிக்குமாறு பிரசாரம் செய்தார். நடிகர் அல்லு அர்ஜுனை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.
மேலும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசுக்கு ஆதரவாக அல்லு அர்ஜுன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நிலையில், பவன் கல்யாணை ஆதரித்து ராம் சரண் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஒரே நேரத்தில் அதிகமான பொதுமக்கள் கூடியதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் தான் அல்லு அர்ஜுன் தேர்தல் விதிகளை மீறியதாக புகார்கள் கிளம்பின.
ஒரே நேரத்தில் எந்த அனுமதியும் இன்றி ஏராளமானவர்களை கூட்டம் சேர்த்ததாக கூறி நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ஷில்பா ரவி ரெட்டி ஆகியோர் மீது தேர்தல் விதிமீறல் தொடர்பான வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.









