குஜராத் மாநிலம் சூரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, அவர் தலைமறைவானார். இந்த நிலையில் 20 நாட்களுக்குப் பிறகு அவர் மீண்டும் பொதுவெளிக்கு வந்து சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மூன்று கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவுகள் வரும் வாரங்களில் நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குஜராத்தில் ஒரே கட்டமாக மே 7ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது.
மாநிலத்தின் 26 தொகுதிகளில் 25 தொகுதிகளுக்கு அப்போது தேர்தல் நடந்தது. இதில் குஜராத்தில் உள்ள சூரத் மக்களவைத் தொகுதியில் பாஜக போட்டியின்றி வெற்றி பெற்றது. ஏனெனில் அங்குப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனுவில் முன்மொழிந்தவர்களின் கையெழுத்துகளில் உள்ள குழப்பம் காரணமாக அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
மற்ற அனைத்து வேட்பாளர்களும் தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்ற நிலையில், பாஜக அங்குப் போட்டியின்றி வெற்றி பெற்றது. அப்போது நிலேஷ் கும்பானி தலைமறைவான நிலையில், அவர் மீது காங்கிரஸ் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்தது. சுமார் 20 நாட்களாக நிலேஷ் கும்பானி எங்கு இருக்கிறார் என்றே தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் 20 நாட்களுக்குப் பிறகு மீண்டும் பொதுவெளிக்கு வந்த நிலேஷ் கும்பானி சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி தனக்குத் துரோகம் செய்துவிட்டதாகக் கூறிய அவர், இத்தனை காலம் குஜராத் மாநில தலைவர் சக்திசிங் கோஹிலுக்காகவே அமைதியாக இருந்ததாகத் தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் அவர் பேசுகையில், “காங்கிரஸ் தலைவர்கள் நான் துரோகம் செய்ததாகக் கூறுகிறார்கள். உண்மையில் காங்கிரஸ் கட்சி தான் எனக்குத் துரோகம் செய்தது. கடந்த 2017 சட்டசபைத் தேர்தல் சமயத்தில் சூரத் கம்ரேஜ் தொகுதியில் எனது டிக்கெட்டை கடைசி நேரத்தில் ரத்து செய்தது காங்கிரஸ்தான். முதல் தவறை செய்தது காங்கிரஸ்தான். நான் இல்லை.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இப்படிச் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் சூரத்தில் ஐந்தே ஐந்து நிர்வாகிகள் தான் காங்கிரஸை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் இங்குக் கட்சியை நாசம் செய்கிறார்கள். அவர்களும் வேலை செய்ய மாட்டேன் என்கிறார்கள். மற்றவர்களையும் வேலை செய்ய விட மறுக்கிறார்கள். ஆம் ஆத்மியும் காங்கிரஸும் இந்தியா கூட்டணியில் தான் உள்ளன. ஆனால், நான் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுடன் பிரச்சாரம் செய்தபோது இந்த 5 நிர்வாகிகள் நான் ஏதோ மிகப் பெரிய தவறு செய்துவிட்டது போலப் பேசினர்” என்றார்.
கடந்த 2017 தேர்தல் சமயத்தில் நடந்ததற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இப்போது இதைச் செய்தீர்களா என்ற கேள்விக்கு அவர் நேரடியாகப் பதிலளிக்க மறுத்துவிட்டார். 2017ஆம் ஆண்டு காங்கிரஸ் தான் தனக்குத் துரோகம் செய்தது என்ற குற்றச்சாட்டை மீண்டும் முன்வைத்தார்.








