அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருவரும் விடுதலை செய்யப்பட்ட நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை செய்யவுள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீடு ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த சென்னை சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது
2008ல் வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு, ஒதுக்கிய விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்திருந்தது.
இதேபோல கடந்த 2001- 06 ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்துக்குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இருந்து வளர்மதி உள்ளிட்டோரை விடுவித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், 2012ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவையும் மறு ஆய்வு செய்யும் வகையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். இந்த வழக்குகள் நாளை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







