அரசியல் பிரிவு அலுவலர் நியமனத்தில் மறுபரிசீலனை தேவை – முதலமைச்சருக்கு சிபிஐ வலியுறுத்தல்…!

முதலமைச்சரின் அரசியல் பிரிவு அலுவலர் நியமனத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

முதலமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தித் தொடர்பாளரும், விஜயின் தனிப்பட்ட ஜோதிடராக  அறியப்பட்ட ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் முதலமைச்சரின் அரசியல் பிரிவு அலுவலர் நியமனத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது ;

நாடறிந்த பிரபல ஜோதிடர் திரு ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல், தமிழ்நாடு அரசின் மாண்புமிகு முதலமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டிப்பது வியப்பளிக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் தனது முகப்பு பதாகையில் மதச்சார்பின்மை, சமூகநீதி ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” குறட்பாவை கொள்கை நிலையாக அறிவித்துள்ளது.

முதலமைச்சர் திரு சி.ஜோசப் விஜய் அவர்கள் ஆன்மீக வழியில்லாமல் கடவுள் மீதும், வழிபாடுகள் மீதும் நம்பிக்கை கொண்டவராக இருக்கலாம்; அது, அவரது தனிப்பட்ட வாழ்க்கை முறையாகும். ஆனால், மதச்சார்பின்மை பண்புகளை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பு அதிகாரம் கொண்ட அரசு எந்த மதச்சார்பு அடையாளத்தையும் கொண்டிருக்கக் கூடாது என்பது நாடு பின்பற்றி வரும் மரபாகும். அறிவியல் கண்ணோட்டமும். பகுத்தறிவு சிந்தனையும் வளர்த்து, வலிமைப்படுத்த வேண்டிய அரசு, முதலமைச்சரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர் ஒருவரை நியமித்திருப்பது சரியல்ல.

இது பொதுமக்களிடம் தவறான நம்பிக்கைகளை ஊக்கப்படுத்துவதாவே அமையும் என்பதால், ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமனத்தை மறுபரிசீலனை செய்து, ரத்து செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு. தமிழ்நாடு முதலமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.