எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர ‘நீட்’ நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன் படி தேசிய தேர்வு முகமை 2026-27-ம் கல்வியாண்டிற்கான இளநிலை நீட் நுழைவுத்தேர்வை கடந்த 3-ந்தேதி நடத்தியது.
நாடு முழுவதும் நடைபெற்ற இந்த நீட் தேர்வை சுமார் 22.80 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த சூழலில் தேர்வு நடைபெறுவதற்கு முன்பே பல்வேறு இடங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து கடந்த 3-ந்தேதி நடைபெற்ற நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும் இன்னும் 12 நாட்களில் மறுத்தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
வினாத்தாள் கசிவு தொடர்பாக இதுவரை ஐந்து மாநிலங்களில் 8-ம் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 45க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மகாராஷ்டிராவின் நாசிக்கில் BAMS மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரின் பெயர் சுபம் கைர்னார் ஆகும். டெலிகிராம் மூலம் வினாத்தாளை பெற்ற கைர்னார் அதனை ஹரியானாவைச் சேர்ந்த ஒருவருக்கு விற்றதாகவும் இதற்காக அவருக்கு சுமார் 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.







