காங்கேசன்துறைக்கும் தமிழக துறைமுகங்களுக்கும் இடையில் சரக்கு கப்பல் சேவையை தொடங்குவதற்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. எனவே, கூடிய விரைவில் சரக்கு கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு மீன்வளத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காங்கேசன்துறைக்கும் தமிழகத்திலுள்ள துறைமுகங்களான காரைக்கால் துறைமுகம், புதுச்சேரி துறைமுகம் ஆகியவற்றுக்கு இடையே சரக்கு கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சேவையானது இலங்கை குடிமக்களுக்கு எரிபொருள், உரம், பால் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள உதவும் என்று அந்த அறிக்கையில் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், யாழ்ப்பாணம் பலாலி-திருச்சி, சென்னை இடையிலான விமான சேவையையும் திட்டமிட்டபடி ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் மற்றும் இலங்கை இடையே ரயில், கப்பல் மற்றும் விமான சேவை நீண்ட காலமாக இருந்து வந்தது. ரயில் மற்றும் கப்பல் சேவைகள் இப்போது நடைமுறையில் இல்லை. விமான சேவையும் கொழும்பு வழியாகத்தான் இருந்து வருகிறது.
அதேபோல் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் இருந்து திருச்சிக்கு நேரடி விமானங்களை இயக்க வேண்டும் என்பதும் நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது.
காரைக்கால் மற்றும் இலங்கை யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை துறைமுகம் இடையே கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கும் தமிழகத்தின் திருச்சி மற்றும் யாழ்ப்பாணத்தின் பலாலி இடையே விமான சேவையை தொடங்குவதற்கும் இலங்கை அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.