என்னை கைது செய்யுங்கள்: சஞ்சய் ராவத்

நிதிமோசடி வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ள நிலையில், தன்னை கைது செய்யுமாறு சிவ சேனா எம்பி சஞ்சய் ராவத் சவால் விடுத்துள்ளார். சிவ சேனாவைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 40 பேர் அமைச்சர் ஏக்நாத்…

நிதிமோசடி வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ள நிலையில், தன்னை கைது செய்யுமாறு சிவ சேனா எம்பி சஞ்சய் ராவத் சவால் விடுத்துள்ளார்.

சிவ சேனாவைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 40 பேர் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தனி அணியாக உள்ள நிலையில், அம்மாநில அரசியல் கடந்த சில நாட்களாக கொந்தளிப்புடன் காணப்பட்டு வருகிறது.

 

முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்து வருபவர் அக்கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத்.

சிவ சேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் இருக்கும் சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி இருப்பது உத்தவ் தாக்கரே தரப்பிற்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

சஞ்சய் ராவத்தின் நெருங்கிய உறவினரும், ஹெச்டிஐஎல் கட்டுமான நிறுவனத்தின் இயக்குநருமான பிரவீன் ராவத், ரூ.100 கோடியை, தனது குடும்ப உறுப்பினர்கள் உள்பட பலருக்கு பகிர்ந்தளித்திருக்கிறார். தனது மனைவி மாதுரி ராவத்துக்கு ரூ.1.6 கோடியை பிரவீன் ராவத் வங்கிக் கணக்கு மூலம் செலுத்தி இருக்கிறார். மாதுரி ராவத், தனது வங்கிக் கணக்கில் இருந்து சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத்துக்கு 55 லட்சம் ரூபாயை அனுப்பி இருக்கிறார்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, சஞ்சய் ராவத்தின் 11.15 கோடி ரூபாய் மதிப்பிலான அசயா சொத்துக்களை கடந்த ஏப்ரலில் முடக்கியது.

மேலும், பிரவீன் ராவத்தின் 72 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இது தொடர்பாக பிரவீன் ராவத், மகாராஷ்ட்ராவின் பொருளாதார குற்றப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து அவரிடமும், அவரது மனைவி மாதுரி ராவத்திடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

பிஎம்சி வங்கியில், ரூ.4,300 கோடி நிதி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் வர்ஷா ராவத்திடம் அமலாக்கத்துறை ஏற்கனவே  விசாரணை நடத்தியது.

இந்நிலையல், சஞ்சய் ராவத்திடமும் விசாரணை நடத்த முடிவெடுத்துள்ள அமலாக்கத்துறை, மும்பையில் உள்ள பிராந்திய அலுவலகத்தில் நாளை காலை 11 மணிக்கு ஆஜராகுமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நோட்டீஸ் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சஞ்சய் ராவத், மகாராஷ்ட்ர அரசியலில் மிகப் பெரிய மாற்றங்கள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார். பால் தாக்கரேவின் ஆதரவாளர்களான தாங்கள் மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டிற்காக தனது தலை வெட்டப்படுமானால்கூட, தான் எதிரணியின் பக்கம் செல்ல மாட்டேன் என தெரிவித்துள்ள சஞ்சய் ராவத், வேண்டுமானால் என்னை கைது செய்யுங்கள் என சவால் விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.