உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கார் புகுந்து விபத்து உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது அது சம்பந்தமான வீடியோ ஒன்றை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் லகிம்பூர் கெரி பகுதியில் விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தனர். அப்பகுதியில் நடைபெறும் ஒரு விழாவில் மாநில துணை முதலமைச்சர் கேசவ் மற்றும் மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் பங்கேற்க சென்றுள்ளனர். இதில் இணையமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கருப்பு கொடி காட்சி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அமைச்சருடன் வந்த கார் ஒன்று கூட்டத்தில் நடுவே சென்றுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு விவசாயிகள் உயிரிழந்தனர். படுகாயமடைந்த விவசாயிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலும் இரண்டு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் 4 போராட்டக்காரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
https://twitter.com/INCIndia/status/1445087199653888009
இந்நிலையில் இந்த விபத்து குறித்து காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இது குறித்த வீடியோ ஒன்றை காங்கிரஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் கருப்பு நிற எஸ்யுவி கார் ஒன்று போராட்டம் நடைபெற்ற கூட்டத்தின் நடுவே திடீரென பாய்வதை காணமுடிகிறது.
இந்த சம்பவத்தையடுத்து லகிம்பூர் கெரி பகுதிக்கு செல்ல முயன்ற பிரியங்கா காந்தியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்த நாடு வெறும் ஆளுங்கட்சியினருக்கு மட்டும் சொந்தமானதன்று எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். முன்னதாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அங்கிருந்து துணை முதலமைச்சர் மற்றும் இணையமைச்சரை பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் விவசாயிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.








