மசினகுடியில் சுற்றித்திரியும் புலியை பிடிக்கும் பணி 11வது நாளாக தொடர்கிறது.
நீலகிரி மாவட்டம் மசினகுடி வனப்பகுதியில் புலி ஒன்று சமீப நாட்களாக கால்நடைகள் மற்றும், 4 மனிதர்களை அடித்துக்கொண்றுள்ளது. இந்நிலையில் இப்புலியை பிடிக்க அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதனையடுத்து புலியை பிடிக்கும் பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஆரம்பத்தில் புலி சுட்டுக்கொல்லப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 10 நாட்களாக புலியை பிடிக்க வனத்துறையினர் முயன்று வருகின்றனர். மாலை 6 மணிக்குமேல் புலியை பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளதால் நாள்தோறும் வனத்துறையினர் புதிய முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக நேற்று சீனிவாசன் மற்றும் உதயன் ஆகிய இரு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு மருத்துவக்குழுவினர் தேடுதல் பணியை தொடங்கியுள்ளனர். அதே போல், புலியை பிடிக்க பிரத்யேக பயிற்சி பெற்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், வனப் பகுதியை சுற்றி வசிக்கும் கிராம மக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி ஆறு கால்நடை மருத்துவ குழு தனித்தனி குழுக்களாக பிரிந்து, பழங்குடியினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் உதவியுடன் வனப்பகுதிக்குள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.








