“சம்பவம் நடந்த பகுதிக்கு பிரதமர் செல்வாரா?” -பிரியங்கா காந்தி

பிரதமர் நரேந்திர மோடி இன்று லகிம்பூர் கெரிக்கு செல்வாரா என பிரியங்கா காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் லகிம்பூர் கெரியில் மாநில துணை முதலமைச்சர் மற்றும் மத்திய இணையமைச்சர் உள்ளிட்டோர் விழா ஒன்றிற்கு…

பிரதமர் நரேந்திர மோடி இன்று லகிம்பூர் கெரிக்கு செல்வாரா என பிரியங்கா காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் லகிம்பூர் கெரியில் மாநில துணை முதலமைச்சர் மற்றும் மத்திய இணையமைச்சர் உள்ளிட்டோர் விழா ஒன்றிற்கு பங்கேற்க சென்ற போது அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தும் விவசாயிகள் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அமைச்சர் காருடன் உடன் வந்த கார் ஒன்று போராட்டக்காரர்கள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு விவசாயிகள் உயிரிழந்தனர். சிகிச்சை பலனின்றி மேலும் இரண்டு விவசாயிகள் உட்பட 8 பேர் இதில் உயிரிழந்தனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைய முயன்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை உ.பி காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தான் கடந்த 28 மணி நேரமாக எவ்வித உத்தரவு அல்லது வழக்குப்பதிவு இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தன்னை ஏன் உங்கள் அரசாங்கம் தடுத்து வைத்துள்ளது? என்றும் பிரியங்கா கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், இந்த உயிரிழப்பு சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்யாமல் எதிர்க் கட்சியினரை ஏன் கைது செய்துள்ளீர்கள் என்றும் பிரதமருக்கு கேள்வியெழுப்பியுள்ளார். இன்று உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற உள்ள ‘ஆசாதி -75 புதிய நகர்ப்புற இந்தியா’ என்கிற நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்க உள்ளார். இதை குறிப்பிட்டு பேசிய பிரியங்கா, பிரதமர் மோடி சம்பவம் நடத்த இடமான லகிம்பூர் கெரிக்கு செல்வரா? என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

https://twitter.com/priyankagandhi/status/1445219388336922628?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1445219388336922628%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fviral-video-appears-to-show-farmers-being-run-over-by-suv-in-up-district-2564011

தொடர்ந்து பேசிய அவர், லக்னோவில் இந்த விழா கொண்டாட உங்களுக்கு என்ன தார்மீக அதிகாரம் உள்ளது என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

விபத்து ஏற்படுத்தியதாக குறிப்பிடப்படும் காரில் மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அமைச்சர் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இந்த விபத்தையடுத்து உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.45 லட்சமும், படுகாயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சமும் இழப்பீடாக மாநில பாஜக அரசு அறிவித்துள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கண்டன போராட்டத்தை நாடு முழுவதும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.