தமிழகத்தில் வேகமாக பரவி வரும் மர்மக்காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு உடனடியாக சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் தமிழக சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களாக மர்மக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு சார்பாக அனைத்து இடங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும்.
மேலும் மருத்துவமனைகளிலும் மர்ம காய்ச்சலுக்கென சிறப்பு வார்டுகளை ஏற்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து காய்ச்சல் அறிகுறிகள் இருப்பின் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும். தாமாகவே சுயமாக மருந்தகங்களில் மருந்து வாங்கி உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
கடந்த அதிமுக ஆட்சியில் கிட்டதட்ட 37,500 மருத்துவத் துறை பணியாளர்கள் பணிநியமனம் செய்யப்பட்டனர். ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் மருத்துவத்துறை பணியிடங்களை மூடுகிறார்களே தவிர புதியதாக மருத்துவ பணியிடங்களை நிரப்பவில்லை. பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அதிகமான மருத்துவ பணியாளர்களை நியமிப்பது அவசியமான ஒன்றாகும் என கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், பாரம்பரிய முறைப்படி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு விழாக் குழுவினருக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும். ஆன்லைனில் பதிவு செய்வதை அரசு ரத்து செய்ய வேண்டும். ஆன்லைன் பதிவு முறை தொடர்ந்தால் வருங்காலங்களில் ஜல்லிக்கட்டு நம் பாரம்பரிய முறைப்படி நடக்குமா என்பது கேள்விக்குறியே? தமிழக அரசு ஜல்லிகட்டு விழாவை நடத்தக் கூடிய விழாக்கமிட்டியினருக்கு காளைகளுக்கு டோக்கன் வழங்கக் கூடிய உரிமையை வழங்க வேண்டும். இது குறித்து சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே நான் மற்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் தீர்மானங்களை கொண்டு வந்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.







