நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் பகுதி மக்கள் வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் எனக்கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த ஜேடர்பாளையம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 80 வருடங்களாக வசித்து வருகின்றனர். இவர்கள் வீடு கட்டியுள்ள நிலம் அரசிற்கு சொந்தமானது. எனவே அரசு நிலத்தை ஆக்கிரமித்து இவர்கள் கட்டியுள்ள வீடுகளை இடிக்க வேண்டும் என தனிநபர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து அரசு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டியுள்ள வீடுகளை இடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டியிருந்த வீடுகளை இடித்து அகற்றினர்.
இதனால் பாதிக்கப்பட்ட ஜேடர்பாளையம் மக்கள் இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காவல் துறையினர் போராட்டம் நடத்தியவர்களை அங்கிருந்து கலைந்து போக சொல்லி போலீசார் தெரிவித்தனர்.இதனால் போராட்டக்காரர்களுக்கும்,போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து போராட்டகாரர்கள் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா.பி.சிங்கை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனு குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்ததை தொடர்ந்து அங்கிருந்து போராட்டகாரர்கள் கலைந்து சென்றனர்.








