இடைத்தேர்தல் வெற்றி திமுகவிற்கு எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி திமுகவிற்கு எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும் என்று தேர்தல் பிரசாரத்தின் போது எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை ஆதரித்து அக்கட்சியின்…

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி திமுகவிற்கு எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும் என்று தேர்தல் பிரசாரத்தின் போது எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை ஆதரித்து அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், எல்லா அரசியல் கட்சியின் பார்வையும் ஈரோடு தேர்தலை நோக்கி தான் உள்ளது. ஈரோடு தேர்தலின் வெற்றி தான் நாடாளுமன்ற தேர்தலின் வெற்றி. வாக்கு எண்ணிக்கையில் இரட்டை இலை தான் முன்னிலையில் இருக்க வேண்டும்.

தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டுமானால் பொருளாதாரத்தில் நாம் முன்னேற வேண்டும். ஈரோடு மாவட்டத்தின் ஜவுளி உள்ளிட்ட பல தொழில் வளர்ச்சி திட்டங்களை கொடுத்துள்ளோம். ஏரிகள் தூர் வாரப்பட்டன. தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. விசைத்தறி உரிமையாளர்களுக்கு வளர்ச்சி கொடுப்பதற்காக வருடம் தோறும் இலவச வேட்டி, சேலையை வழங்கினோம். ஆனால் திமுக ஆட்சியில் அதை நிறுத்தியதால், பல ஆயிரம் நெசவாளர்கள் வேறு வேலைக்கு சென்றுவிட்டனர். இதனால் நெசவு தொழில் முடங்கியுள்ளது.

திறமையற்ற முதலமைச்சர், நாட்டை ஆட்சி செய்து வருகிறார். கரப்சன், கலெக்சன், கமிசன் வாங்குவதில் தான் முதலமைச்சர் முதலிடத்தில் உள்ளார். தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை திமுகவின் மாவட்ட செயலாளர்கள் போல் செயல்பட்டு வருகின்றன. காட்சியும், ஆட்சியும் மாறும். அதன் எதிர்வினையை சந்திப்பீர்கள் என்று ஆவேசமாக கூறினார்.தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. தேர்தல் பயத்தினால் திமுக 20 அமைச்சர்களை களத்தில் இறக்கியுள்ளது. தினமும் கிடா விருந்து நடைபெறுகிறது. வீடுவீடாக சென்று ரூ.1000 கொடுக்கிறார்கள். எவ்வளவு பணம் கொடுத்தாலும், வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுடைய பணம். அதுவும் கொள்ளையடித்த பணம். ஆனால் ஓட்டு மட்டும் இரட்டை இலைக்கு போட்டு விடுங்கள் என்றார்.

அதிமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களுக்கு திமுக திறப்பு விழா நடத்தி வருகிறது. பேனா நினைவு சின்னம் வைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் எல்லா பக்கமும் எதிர்ப்பு வருகிறது. அதை சிந்தித்து பார்க்க வேண்டும். கடலில் வைத்தால் தான் பேனாவா? நினைவு மண்டபம் முன் வைக்க வேண்டியது தானே!! ரூ.2 கோடியில் வைக்க வேண்டியது தானே!! ரூ.80 கோடியில் தான் வைக்கனுமா?? ரூ.78 கோடியை மக்களுக்கு செலவு செய்யலாமே என்று தெரிவித்தார்.திமுக ஆட்சிக்கு வந்தால் நிதி நிலைமையை சரி செய்வோம் என்றனர். இன்று ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் ரூ.1.62 லட்சம் கோடி கடனை வாங்கியுள்ளது. முதலமைச்சருக்கு நாட்டு மக்களை பற்றி கவலை இல்லை. மகன் நடித்த படத்தின் வெற்றியும், வசூல் பற்றியும் தான் கவலை. உதயநிதிக்கு பட்டாபிஷேகம் செய்து அமைச்சராக்கியுள்ளனர். ஆட்சிக்கு வந்து இரண்டு வருடம் ஆகிவிட்டது. ஏன் இன்னும் நீட் தேர்வு ரத்து பண்ணவில்லை.

நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசிய தெரியும் என கூறினார்கள். இன்று ஈரோடு இடைத்தேர்தல் வந்துவிட்டது. ரகசியத்தை இன்னும் சொல்லவில்லை. கவர்ச்சிகரமான பொய் சொல்லி ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். இந்த தேர்தலின் வெற்றி திமுகவிற்கு எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.